தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது வனத்துறை குறித்த அறிவிப்புக்கு நிதியமைச்சர் பன்னீர்செல்வம் கைத்தட்டலை கேட்டு வாங்கியது சிரிப்பலையை உண்டாக்கியது.
தமிழக அரசின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அப்போது “சுற்றுச்சூழல் மாசினால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கத்துடன் மரம் நடும் திட்டத்தை 2011-2012 ஆம் ஆண்டில் இருந்து வனத்துறை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் அரசின் நிலங்கள், தனியார் நிலங்கள் மற்றும் தரம் குன்றிய வனப்பகுதிகளில் நடப்பாண்டில் நடப்பட்டு வரும் 72 லட்சம் மரக்கன்றுகள் உட்பட 6.12 கோடி மரக்கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன” என ஓபிஎஸ் வாசித்துக்கொண்டிருந்தார்.
அப்போது வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மட்டும் கைத்தட்டினார். மற்ற யாரும் கைத்தட்டவில்லை. இதனால் பன்னீர்செல்வம் பட்ஜெட் வாசிப்பதை நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்து “கைத்தட்டுங்களேன்... பாவம் அண்ணன் மட்டும் கை தட்டிக்கொண்டிருக்கிறார்” எனக்கூறி சிரித்தார். பின்னர் அனைவரும் கைத்தட்டினர். தொடர்ந்து ஓபிஎஸ் பட்ஜெட்டை வாசித்தார்.