மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிக்கையையும் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் சிஏஏ சட்டம் அமலாவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அறிவிக்கும் மோடி தலைமையிலான அரசின் நடவடிக்கை நாட்டிற்கு எதிரானது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திங்கட்கிழமை குற்றம் சாட்டியிருந்தார். மேலும் வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் இதற்கு பதிலளிப்பார்கள் என்றும் இச்சட்டத்திற்கு ஆம் ஆத்மி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தவிர இச் சட்டத்தை அமல்படுத்தியதன் மூலம் அண்டை நாடுகளில் உள்ள ஏழை மக்களை இந்தியாவில் தனது வாக்கு வங்கியாக மாற்றுவதற்கான பாஜகவின் மோசமான அரசியல் என்றும் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது குறித்து இன்று செய்தியாளர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பதாக இருந்த நிலையில், குடியுரிமை திருத்த சட்டதிர்க்கான எதிர்ப்பு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “இந்த சட்டம் - வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் இந்தியக் குடியுரிமை பெற விரும்பினால், அவர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று பாஜக அரசு சொல்கிறது. இதன் பொருள், சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் கொண்டு வரப்படுவார்கள். இந்தியாவில் அவர்களுக்கு வேலை வழங்கப்படும், வீடுகள் கட்டித் தரப்படும்.
பாஜகவால் நம் குழந்தைகளுக்கு வேலை வழங்க முடியாது, ஆனால், பாகிஸ்தானில் இருந்து வரும் குழந்தைகளுக்கு வேலை கொடுக்க நினைக்கின்றனர். இந்தியாவில் பலர், வீடற்றவர்கள், ஆனால், பாகிஸ்தானில் இருந்து குடிபெயர்பவர்களை நமக்கு உரிமையான வீட்டில் குடியமர்த்த வேண்டும், பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். இந்திய அரசின் பணம் நமது குடும்பம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள 2.5 முதல் 3 கோடி சிறுபான்மையினர் உள்ளனர். இச்சட்டத்தின் மூலம் இவர்கள் இந்தியா வரும்போது, அவர்களுக்கு வேலைவாய்ப்பை யார் தருவது?
மத்திய அரசின் இந்த நடவடிக்கை வாக்கு வங்கி அரசியலின் ஒரு பகுதியாகவே பார்க்கப்படுகிறது. சிஏஏ நாட்டுக்கு ஆபத்தானது. குறிப்பாக வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் அசாமின் கலாச்சாரம் ஆபத்தில் உள்ளது. இந்த சட்டவிரோத குடியேறிகளுக்கு குடியுரிமை வழங்க பாஜக விரும்புகிறது. இதன் மூலம் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தனது மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.