தலைமை செயலகம் pt web
தமிழ்நாடு

இன்று தொடங்குகிறது சட்டசபை... விஸ்வரூபமெடுக்கும் கள்ளக்குறிச்சி, மாஞ்சோலை விவகாரங்கள்!

நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மானியக் கோரிக்கை விவாதத்துக்காக இன்று முதல் சட்டமன்றம் கூடவிருக்கிறது.

இரா.செந்தில் கரிகாலன்

திமுக முன்னிருக்கும் சவால்கள்?

நாடாளுமன்றத் தேர்தலின் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட மானியக் கோரிக்கை விவாதத்துக்காக இன்று முதல் சட்டமன்றம் கூடவிருக்கிறது. இன்று, மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு சபை ஒத்திவைக்கப்படும். நாளை முதல் துறை வாரியாக விவாதம் நடைபெறும். இந்தக் கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரம், மாஞ்சாலை தொழிலாளர்கள் இடமாற்றம் உள்ளிட்ட விஷயங்கள் மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபின், துறைகள் தோறும் மானிய கோரிக்கை தொடர்பான விவாதம் நடப்பது வழக்கம்.

சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்

அந்தவகையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர், பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. உரையின் மீது 15-ம் தேதி வரை விவாதம் நடைபெற்றறது. தொடர்ந்து, 15-ம் தேதியே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு தனது பதிலுரையையும் அளித்தார். தொடர்ந்து, இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, பிப்.19ம் தேதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

பிப்.20-ம் தேதி தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து, நிதி நிலை அறிக்கைகள் மீதான விவாதம் பிப்.22-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அன்று இரு அமைச்சர்களும் பதிலுரை அளித்த பின்னர் தேதி அறிவிக்கப்படாமல் சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து, துறைகள் தோறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்தப்பட வேண்டிய நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு தள்ளிவைக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளின் முக்கியக் கேள்விகள்

இந்தநிலையில், இன்று மீண்டும் சபை கூடுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 15 பேருக்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதோடு, மறைந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ புகழேந்திக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுவதோடு சபை ஒத்திவைக்கப்படும்.

நாளை முதல், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு வாக்கெடுப்பு நடைபெறும், நாளை காலை நீர்வளம், இயற்கை வளங்கள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை குறித்த விவாதம் நடைபெறும். மாலை, வீட்டுவசதி, நகா்ப்புற வளா்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை ஆகிய துறைகளுக்கான விவாதம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து, 22, 24, 25 - 29 வரை துறை வாரியாக விவாதம் நடைபெறவிருக்கிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை

தற்போது தமிழக அரசியல் களத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம், மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்கள் இடமாற்றம், மேகதாது அணை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை எதிர்க்கட்சிகள் முக்கியமாக எழுப்புவார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக இருக்கிறது.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில், அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது. “கள்ளச்சாராயத்தை ஒழிக்க திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். “மதுவிலக்குத்துறை அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும்” என பாஜக தலைவர் அண்ணாமலை கருத்துத் தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்படும். அதுமட்டுமல்லாது, மாஞ்சோலை தொழிலாளர்கள் இடமாற்ற விவகாரமும் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படும். அதுவும், விவாதம் தொடங்கும் முதல்நாளே, நீர்வளம், தொழிலாளர் நலன், மதுவிலக்குத்துறை மீது விவாதம் நடைபெறவிருப்பதால் ஆரம்பம் முதலாகவே ஆளும் கட்சிக்கு பல்வேறு சவால்கள் இருக்கும் என்கிறார்கள்.

குறிப்பாக கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பாக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர அதிமுக முடிவு செய்துள்ளது. சபாநாயகர் அப்பாவுவிடம் மனு கொடுத்து நாளை விவாதிக்க அதிமுகவினர் நேரம் கேட்டுள்ளனர். இதற்கிடையே விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 35 என்று உயர்ந்துள்ளது.