அமைச்சர் ரகுபதி, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. பாமக தலைவர் அன்புமணி pt web
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு: அமைச்சர்கள் vs எதிர்க்கட்சித் தலைவர்கள்!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டும் நிலையில், ஆளும் தரப்போ சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

Angeshwar G

சட்டம் ஒழுங்கு முழுமையான தோல்வி

ஒரே நாளில் மூன்று அரசியல் கொலை நிகழ்ந்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்நிலையில்,

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே முன்விரோதம் காரணமாக காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்,

கடலூரை சேர்ந்த அதிமுக நிர்வாகி பாகூர் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்,

சிவகங்கை பாஜக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்

ஆகியவற்றை குறிப்பிட்டு எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். அவர்களில் “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முடியாவிட்டால் திமுக அரசு பதவி விலக வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஒரேநாளில் 3 கொடிய அரசியல் படுகொலைகள் நடந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் “தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது என்பதையே இந்த படுகொலைகள் காட்டுகின்றன. குற்றவாளிகளின் நடமாட்டத்தை தடுக்க முடியாமல் காவல்துறை திணறி வருகிறது.

கொடூரமான அரசியல் படுகொலைகள் ஒருபுறம் என்றால், போதைக் கலாசாரமும், அதனால் நிகழும் குற்றச்செயல்களும் தலைவிரித்து ஆடுகிறது. இனியாவது காவல்துறையை தட்டி எழுப்பி தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க உத்தரவிட வேண்டும். அதை செய்ய முடியாவிட்டால், தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த அரசியல் படுகொலைகளுக்கு பொறுப்பேற்று தமிழ்நாடு அரசு பதவி விலக வேண்டும்” என அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

திராவிட மாடலில் தமிழ்நாடு கொலை மாநிலம்

பத்மநாபன், எடப்பாடி பழனிசாமி

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பில்லை. பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. தினம்தோறும் கொலை நடக்காத நாளே இல்லை. திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் கொலை மாநிலமாக காட்சி அளிக்கிறது” என தெரிவித்தார்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது

சட்டம், ஒழுங்கை சிறப்பாக பராமரிப்பதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் தோல்வி காரணமாக பேசி வருகிறார். அதேபோல் அதிமுக ஆட்சியில் கொடநாடு கொலை வழக்கு நடந்ததில் அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி என்ன நடவடிக்கை எடுத்தார்? தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் கூட தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என பேசியது போல் தற்போதைய திமுக அரசு இல்லை.

அமைச்சர் ரகுபதி

சமீபத்தில் நடந்த சில கொலை சம்பவம் முன்விரோதம் காரணமாக மட்டுமே நடந்தது. தமிழகத்தில் ரவுடிகள் பட்டியலை வைத்து ரவுடிகள் ஏ மற்றும் பி பிரிவை சேர்ந்தவர்கள் மேல் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் சிறப்பாக இருக்கிறது. அதனால்தான் பல முதலீட்டாளர்கள் தமிழகம் நோக்கி வருகின்றனர். இந்தியாவிலேயே தமிழகம் அமைதியான மாநிலமாக இருக்கிறது.

அரசியல் கட்சி தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை என்றால் அதற்கான நடவடிக்கை எடுப்போம். கிளை சிறைகள் எதுவும் மூடவில்லை. சில இடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கின்றன” என அவர் தெரிவித்தார்.

நடவடிக்கை எடுக்கிறார்கள்

சபாநாயகர் அப்பாவு

சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இதுதொடர்பாக கூறுகையில், “கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். அந்த குற்றத்திற்கு நடவடிக்கை எடுக்கிறார்களா என்றுதான் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் எந்த குற்றங்கள் நடந்தாலும் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எடுக்காமல் இருந்தால்தான் என் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

தலைவர்களின் இந்த அடுத்தடுத்த கருத்துகள், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.