விமான சாகசம் முகநூல்
தமிழ்நாடு

சோகமான விமான சாகசம்|“மக்கள் சந்தித்த துயரங்களுக்கு நிர்வாகத் தோல்வியே காரணம்”-எதிர்க்கட்சிகள் சாடல்!

விமானசாகசத்தை காண சென்ற 5 பேர் கூட்ட நெரிசல் போன்ற காரணங்களால் உயிரிழந்தநிலையில், எதிர்க்கட்சிதலைவர்கள் இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

PT WEB

சென்னை மெரினாவில் விமானப்படை சாகசத்தை பார்வையிட லட்சக்கணக்கானோர் திரண்டதால் கூட்ட நெரிசல் மற்றும் கடும் வெயில் காரணமாக பலர் மயங்கி விழுந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமானப்படையினரின் வான் சாகசங்களைக் காண, பொதுமக்கள் லட்சக் கணக்கானோர் திரண்டனர். வெயில் சுட்டெரித்ததாலும், நிகழ்ச்சி முடிந்த பிறகு கூட்டநெரிசல் நிலவியதாலும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதில் பல பேர் மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

கடுமையான பாதிப்புக்குள்ளானவர்கள், ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை, அரசு ராஜிவ்காந்தி மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான், திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன், பெருங்களத்தூரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசன், தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட 90க்கும் மேற்பட்டோர், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சிதலைவர்கள் இதற்கு கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"கூட்டத்தையும், போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு காவல்துறையினர் போதிய அளவில் நியமிக்கப்படவில்லை. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்க தவறிய தமிழக அரசின் நிர்வாகச் சீர்கேடே இதற்கு காரணம்." என்று சாடியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

”சென்னை வான்படை சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் சந்தித்த துயரங்களுக்கு திமுக அரசின் நிர்வாகத் தோல்வியே காரணம்.”

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

"தமிழக அரசு பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருப்பதே இதற்கு காரணம். அடிப்படை ஏற்பாடுகளை செய்யாமல் புறக்கணித்த தமிழக அரசே இதற்கு பொறுப்பு."

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்திரராஜன்

”விமானப்படையின் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த மக்களை கூட தமிழக அரசு பாதுகாக்கவில்லை. இதற்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும்.”

பாமக அன்புமணி ராமதாஸ்

”சென்னை கடற்கரையில் விமானப்படை சாகசத்தைக் காண வந்த மக்களில் 5 பேர் சாவு: போதிய வசதிகளை செய்யாத தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்!

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். வெற்று சவடால்களை விடுக்காமல் இனிவரும் காலங்களிலாவது இத்தகைய சூழல்களை எவ்வாறு கையாள்வது என்பதை திராவிட மாடல் அரசு கற்றுக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.