சேலம் மாவட்டத்தில் கோட்டாட்சியரின் உத்தரவுப்படி பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல இருந்த நிலையில், உயர்நீதிமன்ற ஆணைப்படி ஆலய நுழைவு நிறுத்தி வைக்கப்பட்டது.
தலைவாசல் வட்டம் வடகுமாரை கிராமத்தில் உள்ள காளஹஸ்தீஸ்வரர் - வரதராஜப்பெருமாள் கோவிலுக்குள் தங்களையும் அனுமதிக்குமாறு கோரி வந்த பட்டியலின மக்கள், கடந்த அக்டோபர் மாதம் ஆலய நுழைவுப் போராட்டத்தை அறிவித்தனர். அப்போது அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய ஆத்தூர் கோட்டாட்சியர் சரண்யா, கோயிலுக்கு அரசு தரப்பில் தக்கார் நியமிக்கப்பட்ட பின் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என உத்தரவிட்டிருந்தார். அவர் குறிப்பிட்டிருந்த கால அவகாசம் முடிந்ததால், கோவிலின் சாவி இன்று அரசிடம் ஒப்படைக்கப்படும் என்றும், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கருதப்பட்டது.
ஆனால், பட்டியலின மக்கள் கோயிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் மறியலில் ஈடுபட்டனர். கோயிலின் உரிமை குறித்து கோவிந்தராஜ் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 3 வாரங்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள நிலையே தொடர வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல அனுமதிக்குமாறு பட்டியலின மக்கள் பூஜைப் பொருட்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர். இரு தரப்பினரையும் வருவாய் மற்றும் காவல் துறையினர் சமாதானப்படுத்தினர்.