தமிழ்நாடு

“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி

“ஆறு மாதத்திற்குள் தமிழகத்தில் இடைத்தேர்தல்” - ஓ.பி.ராவத் பேட்டி

webteam

தமிழகத்தில் இடைத்தேர்தல் 6 மாதத்திற்குள் நடத்தப்படும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார். 

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் டெல்லியில் புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் புயல் பாதிப்பு குறித்து கருத்தில் கொள்ளப்படும் என கூறியுள்ளார். 

கேள்வி: 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது தமிழகத்தில் காலியாக இருந்த இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை. தற்போது கூடுதலாக 18 தொகுதிகள் காலியாக உள்ளன. இவற்றிற்கான இடைத்தேர்தல் எப்போது நடத்தப்படும்?

பதில்: காலியாக இருந்த இரண்டு தொகுதிகளில் ஒரு தொகுதி‌யின் ‌தேர்தல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. மற்றொரு தொகுதியில் பிப்.7ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும். மீதமுள்ள 18 தொகுதிகளைப் பொருத்தவரை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட‌வில்லை. ஆகையா‌ல், உயர்நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதேவேளையில் புயலால் தமிழகத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன் இவை அனைத்தும் கருத்தில் கொள்ளப்படும்.

‌கேள்வி: 18 தொகுதிகளைப் பொருத்தவரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவகாசம் உள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான கால அவகாசம் முடிந்தபின் ஒன்றாக நடத்துவது குறித்து பரிசீலிக்கப்படும்.

‌கேள்வி: இரு தொகுதிகளைப் பொருத்தவரை ஒரு தொகுதியில் வழக்கு நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்டீர்கள். அதனால் அவற்றிற்கு தேர்தல் நடத்துவதற்கான கால நிர்ணயத்தைக் கருத்தில் கொண்டு இரு தொகுதிகளுக்கு தனியாக தேர்தல் நடத்தப்படுமா? அல்லது 20 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடத்தப்படுமா?

பதில்: ‌ஒரு தொகுதிக்கு பிப்ரவரி 7ம் தேதிக்‌கு முன் தேர்தல் நடத்தப்படும். விதிப்படி நடத்தியாக வேண்டும். மீதமுள்ள 18 தொகுதிகளுக்கும், வழக்கு நிலுவையில் இருக்கும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் சட்டப்படி அதற்கான கால நிர்ணயத்திற்குள் தேர்தல் நடத்தப்படும்.

கேள்வி: தமிழகத்தில் கஜா புயல் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இடைத்தேர்தல் நடத்துவதற்கு முன் இவற்றை கருத்தில் கொள்வீர்களா?

‌பதில்: ஆமாம். அனைத்து காரணங்களும் கருத்தில் கொள்ளப்படும். மக்க‌ள் பிரச்னை‌யில் இருந்தால், எளிதாக வாக்களிக்க முடியாத நிலை இருந்தால், தேர்தல் நடத்தப்படாது. ஆனால் அதை கருத்தில் கொண்டு செய்வோம்.

கேள்வி: பருவமழையைக் காரணம் காட்டி இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தக்கூடாது என தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்தது. எதிர்காலத்திலும் இதேபோன்று த‌மிழக அரசு வானிலையைக் காரணம் காட்டலாம், இல்லையென்றால் தேர்தல் ஆணையம் ‌தானாகவே இந்த விவகாரத்தை கருத்தில் கொள்ளுமா?

பதில்: ‌சம்மந்தப்பட்ட துறை சார்ந்தோ அல்லது அரசோ இதுதொடர்பாக கூறும்போது தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ளும். அதை ஆராய்ந்து, தேர்தல் நடத்தலாமா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும். இதுதான் நடைமுறை.

‌கேள்வி‌: 18 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்க வேண்டிய காலமும், மக்களவைத் தேர்தல் நடத்தப்படுவதற்கான கால நிர்ணயமும் ஏறத்தாழ ஒன்றாக உள்ளது. ஆகையால் இரண்டையும் சேர்த்து நடத்தும் வாய்ப்பு உள்ளதா?

பதில்: அதைப்பற்றி எண்ணவில்லை.

கேள்வி: ‌ 6 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலம் முடிவதாலேயே இப்படி கூறுகிறீர்களா?

பதில்: ஆமாம். அதுதான் காரணம்.

கேள்வி: இடைத்தேர்தல் நடத்துவதற்கான காலத்தை நீடிக்க வாய்ப்பு உள்ளதா?

‌பதில்: சட்டம் அதற்கு அனுமதியளிக்காது.