நீலகிரி மாவட்ட கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியான குன்னூர் சிம்ஸ் பூங்காவில் நேற்று துவங்கிய பழக் கண்காட்சியை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 62வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியது. இரண்டு நாள் நடைபெறும் இந்த பழக் கண்காட்சியில் தேனி, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, பல வகையான 3 டன் பழங்களைக் கொண்டு பல்வேறு உருவங்களை உருவாக்கி காட்சிப்படுத்தப்பட்டன.
இதில், 1500 கிலோ திராட்சையில் அமைக்கப்பட்டிருந்த கழுகு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பல்வேறு பழங்களை கொண்டு நுழைவுவாயில் வளைவு, மலை தேனீ, பாண்டா கரடி, 'மீண்டும் மஞ்சப்பை', ஊட்டி-200 போன்ற வடிவங்கள் பார்வையாளர்களை கவர்ந்தது.
செங்கல்பட்டு, சிவகங்கை, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், கடலூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டச் சேர்ந்த தோட்டக்கலை துறையின் சார்பில், டிராகன் அணில், புலி, பூண்டி அணை, மீன் போன்ற வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீலகிரி வனப்பகுதியில் மட்டும் காணப்படும் அரிய வகை பழங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு அலங்காரங்கள் முன் நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இந்த பழக் கண்காட்சியை நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்துள்ளனர்.