Ooty Flower Show Johnson
தமிழ்நாடு

'பூக்களில் உருவான மயில்' - உதகையில் பூத்துக் குலுங்கிய மலர்க் கண்காட்சி

மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக 45 அடி உயரத்தில் 80 ஆயிரம் சிவப்பு, வெள்ளை கார்னேஷன் மலர்களைக் கொண்டு தோகை விரித்தாடும் பிரமாண்ட மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

PT WEB

உதகையில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெறும் 125வது மலர்க் கண்காட்சியினை சுற்றுலாத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்.

Ooty flower show

இந்தாண்டு நடைபெறும் மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக 35,000 மலர் தொட்டிகளில் ஜெரேனியம், பால்சம், லிசியான்தஸ், சால்வியா, டெய்ஸி, சைக்லமனீ மற்றும் பல புதிய ரக ஆர்னமென்டல்கேல், ஓரியண்டல் லில்லி, ஆசியாடிக் லில்லி, டேலியாக்கள் மற்றும் இன்காமேரிகோல்டு, பிகோனியா, கேன்டீடப்ட், பிரன்ச்மேரிகோல்டு, பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ், ஜினியா, ஸ்டாக்,வெர்பினா, சூரியகாந்தி, சிலோசியா, ஆனீடிரைனம், ட்யூப்ரஸ் பிகோனியா, பலவகையான கிரைசாந்திமம், ஹெலிகோனியா, ஆர்கிட், ஆந்தாரியம் என மலர் மாடத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள வண்ணமலர் தொட்டிகளை பார்வையிட்டனர்.

மேலும், 125வது மலர்க் கண்காட்சியின் சிறப்பம்சமாக 80 ஆயிரம் சிகப்பு, வெள்ளை கார்னேஷன் மலர்களைக் கொண்டு 45 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள தோகை விரித்த மயில், பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. சிறுவர், சிறுமியர்களை கவரும்வகையில் புலி, சிறுத்தை, வரையாடு, டால்பின், பட்டாம்பூச்சி, சிட்டுக்குருவி, செங்காந்தள் மலர் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், பிரமாண்ட நுழைவு வாயில், 125வது மலர்க் கண்காட்சி, பூங்கா உருவாகி 175வது ஆண்டு விழா ஆகியவற்றுக்கான வடிவமைப்புகளும் கார்னேஷன் மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசித்து மகிழ்ந்து வருகின்றனர்.

ooty flower show

இந்த நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித், தோட்டக்கலை துறை இணை இயக்குநர் சிபிலா மேரி மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.