தமிழ் திரை துறையின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் கடந்த திங்கள் அன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து மிக விரைவில் அறிவிப்பதாக சொல்லியிருந்தார். சந்திப்புக்கு பின்பு பேசிய மாவட்ட நிர்வாகிகளும் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் அவர்தான் முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என்றும் அவரிடம் வலியுறுத்தியதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நடிகர் ரஜினிகாந்தை இன்று அவரது போயஸ் கார்டன் வீட்டில் சந்தித்து பேசினார்.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த சந்திப்பு கூட்டம் நீடித்தது.
“ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது அவருக்கு தான் தெரியும். உடல் நலத்திற்கு பாதிப்பு அளிக்காத வகையில் சிந்தியுங்கள் என ரஜினியிடம் நான் கூறினேன். நானும் அவரும் இந்த சந்திப்பில் என்ன பேசினோம் என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது” என சந்திப்பு கூட்டத்திற்கு பிறகு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து தொடர்ச்சியாக பேசிபவர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது.