தமிழ்நாடு

 “ஆண்டிற்கு 6 மாதம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது” - கிராம மக்கள் கவலை

 “ஆண்டிற்கு 6 மாதம் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது” - கிராம மக்கள் கவலை

webteam

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே தண்ணீர் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

கடலூர் மாவட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 கிராம ஊராட்சிகள் உள்ளன. அவற்றில் மணிமுத்தாறு கரையில் அமைந்துள்ளது மே.மாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் ஆண்டுக்கு 6 மாதங்கள் மட்டுமே ஊராட்சி சார்பில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. மற்ற நாட்களில் பல கிலோ மீட்டர் நடந்து சென்று விவசாயக் கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரவேண்டியுள்ளதாக கவலையோடு கூறுகிறார்கள் கிராம மக்கள். சுகாதாரமற்ற தண்ணீரை பயன்படுத்துவதால் பல நோய்களுக்கு ஆளாவதாகவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். 

கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பால், தெருக்களில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும், கிராமத்தில் பொது சுகாதார வளாகமும் இல்லாததால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஏரி, குளங்களை முறையாக தூர்வாரி மழைநீரை சேமிப்பதற்கு ஏதுவான திட்டங்களை செயல்படுத்த வேண்டும் எனவும் நியாயவிலை கடைக்கு 3 கிலோ மீட்டர் நடந்து செல்லவேண்டியுள்ளதால், தங்கள் கிராமத்திலேயே கடை அமைக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.