சிவகங்கை - ரேஷன் கடையில் 50 மில்லி மட்டும் மண்ணெண்ணெய் விநியோகம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

சிவகங்கை: ரேஷன் கடையில் 50 மில்லி மட்டும் மண்ணெண்ணெய் விநியோகம்... மக்கள் அதிர்ச்சி!

webteam

செய்தியாளர் : நாசர்.

நியாவிலை கடைகளில் மண்ணெணய் விநியோகம் குறைக்கப்பட்டதால் சிவகங்கை அருகே ரேஷன் அட்டைதாரர்களுக்கு 50 மில்லி மண்ணெண்ணெய் மட்டும், விநியோகம் (2 ரூபாய்க்கு) செய்யப்படுகிறது. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள், சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழக முழுவதும் நியாய விலை கடைகளின் மூலம் மானிய விலையில், சீனி, சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை மண்ணெண்ணெய் போன்ற பொருள்களும், விலை இல்லா அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு படிப்படியாக மண்ணெண்ணெய் வழங்குவதை குறைத்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் மண்ணெண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக சிவகங்கை மாவட்டம் கொல்லங்குடி நியாய விலை கடையில் 950 அட்டைதாரர்கள் உள்ள நிலையில், அங்கு வெறும் 38 லிட்டர் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனை அனைத்து அட்டைதாரர்களுக்கும் சமமாக பிரித்து வழங்க முடிவு செய்த ரேஷன் கடை பணியாளர், ஒவ்வொருவருக்கும் இரண்டு ரூபாய்க்கு 50 மில்லி அளவு மண்ணெண்ணெய் விநியோகம் செய்துள்ளார். இது அட்டைதாரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இச்சம்பவத்தை அங்கிருந்த ஒரு சமூக ஆர்வலர் தனது செல்போனில் படம் பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது அந்தக் காட்சிகள் வைரலாக பரவி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.