தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆக்சிஜனில் 35 டன் மட்டுமே மருத்துவத்திற்கு உகந்தது- தமிழக அரசு தகவல்

ஸ்டெர்லைட் ஆக்சிஜனில் 35 டன் மட்டுமே மருத்துவத்திற்கு உகந்தது- தமிழக அரசு தகவல்

Sinekadhara

ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் 1050 டன் ஆக்சிஜனில் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு உகந்தது என தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரம், வெண்டிலேட்டர், படுக்கை வசதிகள், ரெம்டெசிவிர் மருந்து, ஆக்சிஜன் வசதிகள் தமிழகத்தில் எவ்வாறு கிடைக்கிறது என்பது குறித்து உயர் நீதிமன்றம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாகவும், முதல்வர் பிரதமருக்கு எழுதிய கடிதம் தொடர்பாகவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதுகுறித்து பதிலளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், தமிழகத்திலிருந்து ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பக்கூடாது என முதல்வர் கடிதம் எழுதியதற்குக் காரணம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தானே தவிர, தற்போது போதிய ஆக்சிஜன் கையிருப்புள்ளதாகத் தெரிவித்தார்.

அதேசமயம் ஸ்டெர்லைட் ஆலையைப் பொறுத்தவரை 1050 டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யமுடியும் என்றும், ஆனால் அதில் 35 டன் மட்டுமே மருத்துவ பயன்பாட்டிற்கு உகந்தது என்றும், மீதமுள்ள ஆக்சிஜனானது பெரும்பாலும் தாமிர உற்பத்திக்குத்தான் பயன்படும் என்றும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக புகார்கள் வருவதால், அதுதொடர்பான புகார்களுக்கு 104 என்ற எண் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய சிறப்பு மையம் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது சென்னை மண்டலத்திற்கு உட்பட்டோர் நேரடியாக வந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.