தமிழ்நாடு

ஆன்லைன் வர்த்தகத்திற்கு பிரபல நடிகர்களே துணை போவதா? - வியாபாரிகள் வேதனை

ஆன்லைன் வர்த்தகத்திற்கு பிரபல நடிகர்களே துணை போவதா? - வியாபாரிகள் வேதனை

rajakannan

ஆன்லைன் வர்த்தகம் என்பது இன்று பெரும்பாலான மக்களின் வாழ்வில் ஒரு இன்றியமையாத அங்கமாக மாறிவிட்டது. இதற்கு காரணம் ஆன்லைன் வர்த்தகத்தில் விலை மலிவாக கிடைக்கும் பொருட்கள், அதிகப்படியான தள்ளுபடி, வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வசதிகளை மாற்றியமைத்தல் போன்றவை. இது மக்களின் பணத்தை மிச்சப்படுத்துவதோடு சேர்த்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. 

உலக அளவில் பெரும் வர்த்தகமாக மாறி வரும் இந்த ஆன்லைன் சந்தையின் விளம்பரங்களுக்கு சினிமா பிரபலங்களும் உறுதுணையாக இருக்கின்றனர். இது ஒரு நல்ல மாற்றமாக பார்க்கப்பட்டாலும், ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு மற்றும் குறு வியாபாரிகள் பெரிய பாதிக்கப்படுவதாகவும், இதன் மூலம் வியாபாரிகளின் வாக்ழ்கை தரம் முழுவதுமாக முடக்கப்படுவதாகவும் குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்தவண்ணம் உள்ளன. உண்மையில் ஆன்லைன் வர்த்தகத்தால் சிறு குறு வியாபாரிகளின் வர்த்தகம் எந்த அளவில் பாதிக்கப்படுகிறது என்பது குறித்த முழுமையான விவரங்களை பெற வணிக சங்க ஒருங்கிணைப்பாளர் அவர்களை தொடர்பு கொண்டோம். அவர் கூறியதாவது,

ஆன்லைன் வர்த்தகம் மூலம் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், எலக்ரானிக் பொருட்கள் உட்பட மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களும் எளிதில் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவை வழக்கமான சந்தைகளில் விற்கப்படும் பொருட்களின் விலையை விட குறைவான விலையில் விற்கப்படுகின்றது. 

இதற்கு முதற் காரணம் ஆன்லைன் வர்த்தகம் உலக அளவில் செயல்படுத்தப்படுவதுதான். உலக அளவில் ஆன்லைன் சந்தை பெரிய அளவில் செயல்படுவதால், இவர்கள் நேரடியாக தயாரிப்பு நிறுவனத்தையே தொடர்பு கொண்டு பொருட்களை கொள்முதல் செய்கின்றனர். இதில் காய்கறிப் பொருட்களை தவிர்த்து மற்ற பொருட்கள் எதனையும் அவர்கள் குடோன்கள் போன்றவற்றில் தேக்கி வைப்பதில்லை. 

நேரடியாகவே ஆன்லைன் விற்பனை சந்தைக்கு கொண்டுவருகின்றனர். இந்த சமயங்களில் காய்கறிகள் கெடாமல் இருப்பதற்கு அவற்றில் ரசாயனங்கள் செலுத்தப்பட்டு அவை குளிரூட்டப்படும் கிடங்குகளில் வைக்கப்படுகின்றன. அதன் பின்னர் மார்க்கெட்டில் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவும் போது அவற்றை ஆன்லைன் சந்தையில் மலிவு விலையில் களம் இறக்குகின்றனர்.

இதனால் நேரடி காய்கறி வியாபாரிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். காய்கறி பொருட்களை தவிர்த்து பிறப் பொருட்களை பார்த்தோம் என்றால் ஆன்லைன் நிறுவனங்கள் அவற்றை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்கின்றனர். இதற்கு வெளிநாட்டு வங்கிகளில் கடன் பெறுகின்றனர். இந்த கடனுக்கு வட்டி விகிதம் என்பது மூன்று சதவீதத்துக்கு கீழாக கிடைக்கிறது. இதனால் கடனை அவர்கள் எளிதில் பெற்றும் விடுகின்றனர். 

ஆனால் நம்மூர் வங்கிகளில் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் கடன் தொகையின், வட்டி விகிதமானது என்பது 11 சதவீதமாக இருக்கிறது. இதற்கு மேல் ஏஜேண்டுகளின் தொல்லை வேறு, வியாபாரிகள் முறைப்படி வங்கி கடனை பெறலாம் என நினைத்தால், அதை தடுக்கும் விதமாக இந்த ஏஜெண்டுகள் செயல்படுகின்றனர். இதற்கு வங்கிகளில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் சில அதிகாரிகளும் துணை நிற்கின்றனர். இதையெல்லாம் கடந்து நாங்கள் வங்கி கடனை பெறுவது எனபதே குதிரை கொம்பாக இருக்கிறது.

இந்த ஆன்லைன் விற்பனை சந்தையில் அரசுக்கும் முக்கியபங்கு இருக்கிறது. கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு தண்ணீர், வாகன போக்குவரத்து போன்ற அத்தியாவசிய தேவைகள் அனைத்தையும் அரசு செய்கிறது. ஆனால் நாங்கள் காய்கறிகளை குளிர்வித்து விற்பதற்கு தேவையான குளிர் கிடங்குகளுக்கான கோரிக்கை என்பது இன்னும் அப்படியே இருக்கிறது. இப்படி இருக்கும் போது எப்படி நாங்கள் அவர்களுடன் போட்டி போட முடியும் என்றார். 

இது மட்டுமல்லாமல் இந்த ஆன்லைன் வர்த்தகத்திற்கு சினிமா பிரபலங்களும் விளம்பரங்களின் மூலம் துணைபுரிகின்றனர். பணம் வாங்கி கொண்டு நடிக்கும் பிரபலங்கள் அவற்றின் தரம் மற்றும் அந்நிறுவனத்தின் பிண்ணனி குறித்து சிறிதும் யோசிப்பதில்லை. ஆனால் இவர்களின் மூலம் உருவாக்கப்படும் விளம்பரங்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்ப்படுத்துகிறது. இதனால் மொத்த வியாபார வர்த்தகமும் கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு சென்று விடுகிறது. 

முன்பெல்லாம் சென்னையில் கடைகள் காலிசெய்யப்பட்டால் அதை வாங்குவதற்கு உடனே வியாபாரிகள் வந்து விடுவர். ஆனால் அந்த சதவிகிதம் தற்போது பெருமளவில் குறைந்து விட்டது. இந்த நிலைமை இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து நீடித்தால் வணிகம் முழுக்க கார்ப்பரேட் கையில் சிக்கி சிறு வியாபரிகளின் வாழ்வு முற்றிலும் முடக்கப்பட்டு விடும் என்று வேதனையுடன் தெரிவித்தார்.