ஆன்லைன் ரம்மி, உயர்நீதிமன்றம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்ட தடைக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் எடுத்த முடிவு!

PT WEB

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரித்தது. வழக்கில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், ’இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் கருத முடியாது’ என வாதம் வைத்தது.

ஆனால், ’இந்தச் சட்டத்தைக் கொண்டுவர தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. தற்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய்ந்த பிறகே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது’ என அரசுத்தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

கடந்த விசாரணையின்போது வாதங்கள் நிறைவுபெற்றதாக அறிவித்த நீதிபதிகள், எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்வதற்காக விசாரணையை தள்ளி வைத்திருந்தனர். இன்று, வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பிலும், அரசுத்தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.