தமிழ்நாடு

ஆன்லைன் சூதாட்டம்: ரூ.7 லட்சம் பணத்தை இழந்த விரக்தியில் இளைஞர் எடுத்த விபரீத முடிவு

kaleelrahman

இணையதள சூதாட்டத்தில் 7 லட்ச ரூபாய் பணத்தை இழந்த இளைஞர் மனவேதனையில் ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எல்வின் பிரட்ரிக் என்ற இளைஞர், கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இணையதள சூதாட்டத்தில் ஆர்வமாக விளையாடி வந்த இவர், தொடர்ந்து பணத்தை இழந்து வந்துள்ளார்.

தமிழக அரசு இணையதள சூதாட்டத்தை தடை செய்த பிறகும் விளையாட்டை தொடர்ந்து வந்த அவர் கடந்த 4ஆம் தேதி வரை ரூ. 7 லட்சத்து 64 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனவேதனையடைந்து திருப்பூருக்கு வந்த அவர், திருப்பூர் வஞ்சிபாளையம் இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பாக தற்கொலை செய்து கொண்ட நிலையில் யார் என்று அடையாளம் தெரியாததால் ரயில்வே காவல்துறையினர் அவரது புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பியதன் அடிப்படையில் கோவை பீளமேடு காவல் நிலையத்தில் காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வந்த புகைப்படத்துடன் ஒத்து போயிருந்ததால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

தற்போது பிரேத பரிசோதனைக்காக இறந்தவரின் உடல் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இணையதள சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.