தமிழ்நாடு

ஒரே வாரத்தில் இரண்டு மடங்கான வெங்காயம் விலை 

ஒரே வாரத்தில் இரண்டு மடங்கான வெங்காயம் விலை 

rajakannan

வெங்காயம் வரத்து குறைந்ததால் நாடு முழுவதும் அதன் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையிலும், டெ‌ல்லியில் ஒரு கிலோ 80 ரூபாயாக உயர்ந்துள்ளது.

வெங்காயம் அதிகம் விளையும் மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கனமழை காரணமாக விளைச்சல் குறைந்ததால் அதன் விலை கணிசமாக அதிகரித்துள்ளது‌. டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 70 முதல் 80 ரூபாய் வரையிலும், சென்னையில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

சென்னையில் கடந்த வாரம் 35 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது 60 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. வெங்காய விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது மக்களுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. 

விலையை கட்டுப்படுத்த ஏற்கனவே இருப்பு வைத்திருந்த 56 ‌ஆயிரம் டன் வெங்காயத்தை நாள்தோறும் மத்திய அரசு சந்தைக்கு விநியோகம் செய்து வருகிறது. இதுதவிர, பல்வேறு நாடுகளிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும், விலை அதிகரித்திருப்பது நடுத்தர மக்களை அவதியடையச் செய்துள்ளது.