தமிழ்நாடு

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 - தமிழக அரசு பதில்

ஒரு ரேபிட் கிட்டின் விலை ரூ.600 - தமிழக அரசு பதில்

webteam

மத்திய அரசு நிர்ணயித்த ரூ.600க்கே ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

கொரோனா பாதிப்பு குறித்து தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் இன்று பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது ரேபிட் கிட் விலை தொடர்பாகவும், எண்ணிக்கை தொடர்பாகவும் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. அதில், மத்திய அரசு நிர்ணயித்த ரூ.600க்கு தான் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் ரேபிட் கிட் கருவி வாங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசிடம் 3 லட்சம் ரேபிட் கிட் கருவிகள் ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசு நிர்ணயித்த விலையை மத்திய அரசிடம் தான் கேட்க வேண்டும் எனவும், தமிழக அரசு ஆர்டர் கொடுத்த போது, சத்தீஸ்கருக்கு குறைந்த விலையில் ரேபிட் கிட் கொடுத்த நிறுவனம் பட்டியலிலேயே இல்லை எனவும் கூறப்பட்டது. 24,000 கிட்டுகள் என்ன விலைக்கு வாங்கப்பட்டன என்று சொல்வதில் தயக்கமில்லை என்றும், அதற்கான ஆவணங்களை தரத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, திமுக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசு ரேபிட் கிட் கருவிகளை என்ன விலைக்கு வாங்கியது ? எத்தனை எண்ணிக்கையில் வாங்கியது ? என வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.