ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு சென்னையில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசிய பிற்போக்குத்தனமான கருத்துகளால் சர்ச்சையில் சிக்கினார். அவரது பேச்சு குறித்து மாற்றுத்திறனாளி விஜயராஜ் என்பவர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த சைதாப்பேட்டை காவல்துறையினர், ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் வைத்தே கைது செய்தனர். வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது மாற்றுத்திறனாளிகள் சமூக நீதி இயக்கத்தின் மாநிலத் தலைவர் சரவணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் திருவொற்றியூர் காவல்துறையினரும், மகா விஷ்ணு மீது ஒரு வழக்கைப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கிலும் அவரை கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் முத்தியால் பேட்டை பகுதியில் பஞ்சர் கடை வைத்து நடத்தி வரக்கூடிய மாற்றுத்திறனாளி வடிவேலன் என்பவர் சென்னை முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதற்கிடையில் அவரை வாகனத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்த போது அவர் பல தகவல்களை தெரிவித்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். குறிப்பாக அவர் “மாற்றுத்திறனாளிகள் குறித்து நான் பேசியது உண்மைதான். ஆனாலும் தமது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டு உள்ளது” என்று சொல்லியிருக்கிறார். மேலும்,
“பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் நான் சித்தர்கள் ஆசீர்வாதத்தாலேயே சொற்பொழிவுகளை நடத்தி வருகிறேன்.
மாணவ, மாணவியரை நல்வழிப்படுத்தும் நோக்கில் நான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது.
சித்தர்கள் என்னை வழி நடத்துகின்றன. சித்தர்கள் என்னிடம் பேசுவார்கள். அவர்கள் சொன்னதையே நான் பேசினேன்” என்றெல்லாம் கூறி காவல் துறையினரை ஆச்சரியப்படுத்தியுள்ளார் (!) மகாவிஷ்ணு. இத்துடன், “எனது யூடியூப் சேனலை 5 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். 5 நாடுகளில் இது போன்ற சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறேன். எனது பரம்பொருள் பவுண்டேஷன் மூலமாக பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறேன்” என்றும் காவல்துறையிடம் கூறியிருக்கிறார்.
இதோடு நிற்கவில்லை... சித்தர்கள் சொன்னதையே தாம் பேசியதாக காவல்துறையிடம் தெரிவித்த மகாவிஷ்ணு நீதிபதியிடமும் தானே அவ்விதம் பேசியதாக கூறியிருக்கிறார். இரவு உணவை காவல்துறையினர் மகாவிஷ்ணுவுக்கு வாங்கி கொடுத்த போது, “நானும் தினம்தோறும் பலருக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளேன். கடவுள் உங்களை ஆசிர்வாதிப்பார்” என அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேநேரம், மாற்றுத்திறனாளிகள் குறித்து தாம் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தாலும், மாற்றுத்திறனாளிகள் மனம் புண்படும்படி பேசியதற்கு மகாவிஷ்ணு எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.