தமிழ்நாடு

பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்

webteam

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 2-வது முறையாக பரோல் வழங்கப்பட்டதையடுத்து புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கிருந்து அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு முறைப்படி பரோலில் அழைத்து செல்லப்படுகிறார். 

கடந்த 2017-ஆம் ஆண்டு பேரறிவாளனின் தந்தை குயில்தாசனின் உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து பேரறிவாளனின் தாயார், பரோல் கேட்டு கோரிக்கை வைத்தார். அதனால் பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கபபட்டது. பின்னர், பரோலை நீட்டிக்க கோரிக்கை வைக்கப்பட்டதையடுத்து மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் தந்தைக்கு உடல் நலம் சரியில்லாததாலும், அவரது சகோதரியின் மகள் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவும், அவரது தாய் அற்புதம்மாள், பரோல் வழங்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதையடுத்து பேரறிவாளனுக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, புழல் சிறையில் இருந்த பேரறிவாளன், இன்று காலை வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட பேரறிவாளன், வேலூர் சிறையில் இருந்து முறைப்படி பரோலில் அவரது சொந்த ஊரான ஜோலார்பேட்டைக்கு அழைத்து செல்லப்படுகிறார். 

பரோல் வழங்கப்பட்டுள்ள ஒரு மாதமும் விதிகளுக்கு அப்பாற்பட்டு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என சிறைத்துறை நிபந்தனை விதித்துள்ளது.