தமிழ்நாடு

"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்

"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்

ஜா. ஜாக்சன் சிங்

"அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும். ஆனால் அந்த தலைமை அனைவரையும் அரவணைத்து செல்லும் தலைமையாக இருக்க வேண்டும். எனது தலைமையில் அதிமுக மீண்டும் எழுச்சிப் பெறும்" என சசிகலா தெரிவித்தார்.

அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இடையே அண்மைக்காலமாக போட்டியே நிலவி வருகிறது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுகவின் பொதுச்செயலாளர் என கூறிக் கொண்டிருக்கும் வி.கே.சசிகலா அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு திருத்தணிக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அவர், பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அப்போது குமணன்சாவடியில் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

இன்றைய திமுக ஆட்சியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? ஏதோ தாங்கள் மட்டும் தான் திராவிடர்கள் என்று அவர்கள் மார்தட்டிக் கொண்டு வருகின்றனர். திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் பற்றி எடுத்து சொன்னாலே, இவர்களின் திராவிட சிந்தனை எப்படிப்பட்டது என்பது தெரிந்துவிடும். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்று அறிவித்துவிட்டு பெண்களின் கண்களில் அந்த பஸ் படாமலேயே செலுத்துவது; ஆற்று படுகைகளில் பராமரிப்பு பணிகளை தொடங்காமலேயே மேட்டூர் அணையில் நீர் திறந்து விடுவது என திமுகவின் திராவிட செயல்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம். நாம் நடத்தியது திராவிட ஆட்சியா? அல்லது திமுக நடத்தும் விளம்பர ஆட்சி திராவிட ஆட்சியா?

50 ஆண்டுக்கால வரலாற்றில் அதிமுக தொடர் தோல்வியை இதுவரை கண்டதில்லை. உள்ளாட்சி அமைப்புகளில் 34 பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில் தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால், நமது இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் தொண்டர்கள் தள்ளப்பட்டு இருப்பது வேதனையை அளிக்கிறது. ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? இரட்டை இலை சின்னத்தை முடக்குவதற்கு யார் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது?

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைப்பிடிப்பவர்களே உண்மையான அதிமுக தலைவராக இருக்க முடியும். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும் அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக அது இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பத்திற்கு ஏற்ப எனது தலைமையில் இயக்கம் மீண்டும் வலிமை பெறும். இவ்வாறு சசிகலா பேசினார்.