தமிழ்நாடு

கட்டுமான பணியின்போது வலிப்பு ஏற்பட்டதில் விபரீதம் - மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

கட்டுமான பணியின்போது வலிப்பு ஏற்பட்டதில் விபரீதம் - மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Sinekadhara

கோயம்பேட்டில் கட்டுமான பணியின்போது வலிப்பு ஏற்பட்டதால் மின்சார வயரில் இரும்பு கம்பி பட்டு 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், கஜலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகாமி(59). இவரது வீட்டின் முதல் தளத்தில் புதிதாக ஒரு வீடு கட்டுவதற்காக கடந்த 25ஆம் தேதி அன்று கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. மேஸ்திரி கோவிந்தராஜ் என்பவர் தலைமையில் 6 நபர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது அன்று மதியம் கட்டுமான பணியின்போது தொழிலாளி ஒருவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த நபர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பி அந்த வழியாக சென்ற உயர் அழுத்த மின்சார வயரில் பட்டதில் 4 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்து தீக்காயம் ஏற்பட்டு தூக்கி வீசப்பட்டனர்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு முதலுதவி அளித்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்கள் குறித்து விசாரணை செய்தனர். இதில் காயமடைந்தவர்கள் ஆழ்வார்திருநகரை சேர்ந்த மேஸ்திரி கோவிந்தராஜ்(60), திருவண்ணாமலையை சேர்ந்த தொழிலாளி வினோத்(36), முருகன்(35), ஏழுமலை(36), என்பதும் தெரியவந்தது.

4 பேரும் மின்சாரம் பாய்ந்து தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலியில், ஏழுமலை (36) என்பவர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இதுசம்பந்தமாக வீட்டின் உரிமையாளர் சிவகாமி, ஒப்பந்ததாரர் பழனி ஆகிய இருவரையும் கோயம்பேடு போலீசார் காவல் நிலையம் வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.