NLC- ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு விவகாரம் புதிய தலைமுறை
தமிழ்நாடு

நெய்வேலி NLC-யில் விபத்து.. ஒப்பந்த தொழிலாளர் உயிரிழப்பு

நெய்வேலி என்எல்சி சுரங்கத்தின் 2 ஆவது அனல்மின் நிலைய தொழிற்சாலையில் பணியாற்றி வந்த ஒப்பந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - கே.ஆர்.ராஜா

நெய்வேலி என்எல்சியின் சுரங்கத்தின் 2 ஆவது சுரங்கத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிவந்த சக்கரவர்த்தி என்பவர் வேலை செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த இயந்திரத்தில் எதிர்ப்பாராத விதமாக சிக்கியுள்ளார்.

இயந்திரத்தில் சிக்கிய தொழிலாளரை அருகில் இருந்த தொழிலாளர்கள் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி காப்பாற்றுவதற்கு முயற்சி செய்துள்ளனர். இருப்பினும் அவரை மீட்க முடியவில்லை. அவர் இறந்துவிட்டார் என்று தொழிலாளர்களில் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் என்எல்சி தரப்பில் எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

ஏற்கெனவே ‘தொழிலாளர்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லாதவகையில் சூழல் உள்ளது. போதிய பயிற்சி இல்லாதவர்களும் வேலைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்’ என்று பல தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தும் அரங்கேறியுள்ளது. உயிரிழந்த சக்கரவர்த்தியின் ஒப்பந்தம் இன்னும் 3 மாதங்களில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்துக்கு ஓட்டுநர் மற்றும் அதிகாரிகளின் கவன குறைவே காரணம் எனக் கூறப்படுகிறது. ஆப்ரேட்டரின் உதவியாளராக பணிபுரிந்த சக்கரவர்த்தி கனரக வாகனத்தை பின்னால் இயக்க சொல்லி சிக்னல் கொடுத்த போது அதனை கவனிக்காமல் ஓட்டுநர் முன்னாள் இயக்கியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து

‘என்எல்சியில் பணிபுரியும் தொழிலாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,

இறப்புக்கு உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இறந்தவரின் குடும்பத்திற்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும்’

- உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது அனல் மின் நிலையத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். விபத்து குறித்து நெய்வேலி தெர்மல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.