கைது செய்யப்பட்ட நாகராஜ் PT WEB
தமிழ்நாடு

திண்டுக்கல் | மறுவாழ்வு முகாமை சேர்ந்த இலங்கைத் தமிழர் கொலை; இளைஞரை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார்!

புதுப்பட்டி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமல் ராஜ்

செய்தியாளர் - ரமேஷ்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே புதுப்பட்டியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (40). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் வேலைக்குச் சென்ற இடத்தில் கோவிந்தாபுரம் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் (30) என்பவருடன் ஆனந்த குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பணி முடிந்து முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

உயிரிழந்த ஆனந்தகுமார்

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட இலங்கை தமிழர்!

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு உறங்கச் சென்ற ஆனந்தகுமார் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஆனந்தகுமார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பிணமாகக் கிடந்துள்ளார்.

இது குறித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதைனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவான இளைஞர் கைது

இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஆனந்தகுமாரும் அவரது நண்பர் நாகராஜ் மது அருந்திய போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்பதும் மது போதையில் இருந்த நாகராஜ் துண்டை வைத்து, ஆனந்தகுமாரை கொலை செய்து விட்டுத் தப்பி ஓடிவிட்டார் என்பதும் தெரியவந்துள்ளது.

தப்பியோடிய நாகராஜைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தேடி வந்த நிலையில், திண்டுக்கல்லில் பதுங்கி இருந்த நாகராஜை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

மது போதையில் இலங்கைத் தமிழர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.