தமிழ்நாடு

சட்டமன்ற நூற்றாண்டு விழா எதனடிப்படையில் கொண்டாடப்படுகிறது? - ஒரு பார்வை

சட்டமன்ற நூற்றாண்டு விழா எதனடிப்படையில் கொண்டாடப்படுகிறது? - ஒரு பார்வை

JustinDurai
தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி கட்டிலில் இருக்கும் திராவிட கட்சிகளான திமுகவும் அதிமுகவும் சட்டப்பேரவையின் பொன்விழா மற்றும் வைரவிழாவை கொண்டாடியுள்ளன. சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா எதன் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது?
இந்தியாவில் உள்ள அனைத்து மாநில சட்டமன்றங்களுக்கும் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க அடிப்படையாக இருப்பது 1952ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். ஆனால் அதற்கு முன்பாகவே இந்திய அரசு சட்டம் 1919 -ன் அடிப்படையில் 1921ஆம் ஆண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்றம் தமிழகத்தில் அமைந்தது. அதன்பின்னர் தான் 1937ஆம் ஆண்டு மேலவை, கீழவை என இரு அவைகள் கொண்ட முதல் சட்டமன்றம் அமைந்தது. சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக 1952ஆம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடந்து புதிய அமைச்சரவை அமைந்தது.
எனினும் 1921 ஆம் ஆண்டு முதல் சட்டமன்ற அமர்வை கணக்கிட்டு, 1937-ல் அமைந்த மேலவை, கீழவை அமர்வை அடிப்படையாக கொண்டு, சட்டமன்றத்தின் பொன்விழாவை 1989ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான அரசு கொண்டாடியது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1952ஆம் ஆண்டு அமைந்த முதல் சட்டமன்றத்தை அடிப்படையாக கணக்கிட்டது. அதன்படி அதிமுக அரசு 2012ஆம் ஆண்டு சட்டமன்றத்தின் வைரவிழாவை கொண்டாடியது. இவ்வாறு முன்னாள் முதலமைச்சர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வெவ்வேறு அமர்வை கணக்கிட்டு சட்டமன்றத்தில் பொன் விழா, வைரவிழாவை கொண்டாடினர்.
தற்போது மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 1921 ஆம் ஆண்டு சட்டமன்ற அமர்வை அடிப்படையாக கொண்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது.