தமிழ்நாடு

தீபாவளி அலெர்ட்: தீக்காய சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

தீபாவளி அலெர்ட்: தீக்காய சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்த அமைச்சர்!

webteam

தீபாவளி பண்டிகையை ஒட்டி தீக்காய சிகிச்சைகளுக்காக, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையத்தை அமைச்சர் மா சுப்பிரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உலக விபத்து தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர், மருத்துவக்கல்லூரி இயக்குநர் நாராயண பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் மூலம், தீபாவளி நேரத்தில் எவ்வாறு பாதுகாப்பாக பட்டாசு வெடிக்க வேண்டும் மற்றும் தீக்காயம் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து தீபாவளிக்காக உருவாக்கப்பட்டுள்ள 20 படுக்கை வசதிகளுடன் கூடிய தீக்காய சிறப்பு உள்நோயாளிகள் வார்டை திறந்து வைத்த பின் விழா மேடையில் அமைச்சர் மா.சுப்ரமணியன் உரையாற்றுகையில், ''அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் தீபாவளிக்கு சிறப்பு வார்டு புனரமைக்கபட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொதுவாக இதுபோன்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் உலக மக்கள் விபத்துகளில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும் தீபாவளி நேரத்தில் மக்கள் இவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் அனைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அண்டை மாநிலத்தை சேர்ந்தவர்கள் கூட தீ காயம் ஏற்பட்டால் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையை தேடி வரும் அளவிற்கு இந்த மருத்துவமனை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு தீபாவளி நேரத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்கள். அடுத்த ஆண்டு இது போன்ற நிகழ்வை நாம் நடத்தும் போது ஒருவர் கூட பாதிக்கவில்லை என்ற நிலை இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது அதேபோன்று இந்த ஆண்டும் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தீபாவளியை கொண்டாட நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் பாதுகாப்புடன் கொண்டாட வேண்டும். குழந்தைகள் பட்டாசுகள் வெடிக்கும் போது பெற்றோர்கள் அருகில் இருந்து பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்.

எதிர்வரும் ஆண்டுகள் விபத்தில்லா ஆண்டாக இருக்க வேண்டும், விபத்தில்லா தீபாவளியாக இருக்க வேண்டும் என்பது நமது நோக்கம். உலகம் முழுவதும் 50 பேர் லட்சம் வரை ஆண்டு ஒன்றுக்கு விபத்தினால் மரணம் அடைகிறார்கள். இந்தியாவில் 2020 ஆம் ஆண்டில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 317 பேர் மற்றும் 2021 ல் மட்டும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகள் மூலம் உயிரிழந்துள்ளர்கள்.

முதல் 48 மணி நேரத்திற்கு சிகிச்சை அளிப்பது தான் சவாலான ஒன்று. தமிழ்நாடு முழுவதும் 500 இடங்களில் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் உட்பட மொத்தம் 678 மருத்துவமனைகளில் இன்னுயிர் காப்போம் திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் 1 லட்சத்து 21 ஆயிரத்து 164 பேர் இந்த இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை பயனடைந்து உள்ளார்கள். சுமார் 108 கோடி ரூபாய் இந்த திட்டத்திற்காக இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

விபத்தில்லா தீபாவளி - உலக விபத்து தினம் அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. #masubramanian #TNHealthminister pic.twitter.com/fMkbja2FXN
— Subramanian.Ma (@Subramanian_ma) October 18, 2022

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் செயல்பாடுகளை பார்த்து மத்திய அரசு இதன் மாதிரி வடிவத்தை கேட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்த திட்டமிடும் அளவுக்கு இந்த திட்டம் சிறப்பாக உள்ளது. சரியாகவும் சரியான விதிமுறைகள் கடைபிடித்தால் விபத்து, உயிரிழப்பு நடைபெறாது.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் கூடுதலாக 2 லட்சத்து 80 ஆயிரம் சதுர பரப்பளவில், மருத்துவ உபகரணங்களை கொண்ட வளாகம், 309 கோடி ரூபாய் செலவில் புதிய மருத்துவ கட்டிடம் உருவாகி கொண்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இந்த மருத்துவக் கட்டிடம் திறக்கப்பட உள்ளது என கூறினார்.

இதையும் படிக்க: காஞ்சிபுரம்: தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தியிருந்த 3 பேருந்துகள் தீயில் கருகி நாசம்