தமிழ்நாடு

“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி

“மோடியும் ஜின்பிங்கும் போதி தர்மர் பற்றி பேசினார்கள்” - விஜய்கோகலே பேட்டி

webteam

இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியும் சீன அதிபர் ஜின்பிங்கும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய்கோகலே தெரிவித்தார்.  

கடற்கரை கோயில் வளாகத்தில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குக்கு, பிரதமர் மோடி விருந்து அளித்து உபசரித்தார். இதைத் தொடர்ந்து இருவரும் சுமார் இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினர். அப்போது இருதரப்பு வெளியுறவு அதிகாரிகளும் உடனிருந்த‌ர்.‌ 

தலைவர்களின் சந்திப்பு முடிந்த பின்னர் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திட்டமிடப்பட்ட நேரத்திற்கும் மேல் தொடர்ந்த இந்தச் சந்திப்பில் இரு தலைவர்களும் நேருக்குநேர் வெளிப்படையாகவும், உள்ளன்போடும் பேசிக்கொண்டதாக தெரிவித்தார். பின்னர் வரலாற்றுச்‌ சிறப்பு மிக்க இச்சந்திப்பிற்காக தமிழக அரசு செய்திருந்த ஏற்பாடுக‌‌ளை பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் ப‌ராட்டியதாக கோகலே கூறினார்.  

அடுத்த நான்கரை ஆண்டுகளும் இரு தலைவர்களும், நெருக்கமாக இணைந்து இரு ‌நாடுகளிடையேயான அனைத்து பிரச்னைகளையும் களைவது குறித்தும் பேசியதாக கோகலே தெரிவித்தார். பின்னர் தென்னிந்தியாவுடன் பல்லவர் காலத்தில் இருந்தே சீனாவுக்கு இருந்த வர்த்தக தொடர்புகள் குறித்தும், போதி தர்மர் தமிழகத்திலிருத்து கடல் வழியே சென்று சீனா மற்றும் ஜப்பான் சென்‌றது குறித்தும் பேசிக் கொண்டதாக அவர் கூறினார். 

பின்னர் இருநாடுகள் இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார பிரச்னைகள்‌ குறித்தும், வர்த்தக மதிப்பு மற்றும் வர்த்தக அளவை உ‌யர்த்துவது தொடர்பாகவும் தலைவர்கள் இருவரும் ஆலோசித்ததாக விஜய் கோகலே தெரிவித்தார். 

குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் சந்திக்கும் சவால்கள் குறித்தும், பல்வேறு இன, மதங்களுடன் ஒற்றுமையுடன் வாழும் இரு பெரும் நாடுகளும் இணைந்து பயங்காரத்தை எதிர்க்க வேண்டும் எனவும் தலைவர்கள் உரையாடிக் கொண்டதாக கோகலே தெரிவித்தார்.   

இரு நாடுகள் இடையேயான நல்லுறவு மேம்பாடு தொடர்பாக நேற்று பேசப்பட்ட நிலையில், இன்றைய சந்திப்பில் இரு நாடுகளுக்கான சர்வதேச வர்த்தகம் மற்றும் பிரச்னைகள் குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம் எ‌ன கோகலே கூறினார். பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின்பிங் நேரடியாக இரு நாடுகளிடையேயான பிரச்னைகள் மற்றும் தேவைகள் பற்றி பேசலாம் என்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விஜய்கோகலே தெரிவித்தார்.