வழக்கமாக தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் சென்னையிலிருந்து ஏராளமான மக்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் செல்வார்கள். இந்த கூட்ட
நெரிசலை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் தங்கள் விருப்பம் போல டிக்கட் விலையை நிர்ணயம் செய்வார்கள். சில நேரங்களில் டிக்கட்டின் விலை இரண்டு, மூன்று
மடங்கிற்கும் கூடுதலாக இருக்கும். இதுகுறித்து மக்கள் தரப்பிலிருந்து எத்தனையோ முறை அறிவுறுத்தியும் நிரந்தர தீர்வு எதுவும் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது கொரோனா தொற்றினால் உலகமே பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய
மாவட்டங்கள் தனிமை படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், தமிழக அரசு ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன் படி நாளை மாலை 6 மணிமுதல்
இம்மாதம் 31’ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது.
144 என்ற இந்த ஊரடங்கு உத்தரவினால் பலரும் இன்றே சொந்த ஊர்களுக்கு செல்ல முயற்சி செய்கின்றனர். சென்னை கோயம்பேட்டில் தற்போது மக்கள் கூட்டம்
அலைமோதுகிறது. ஏற்கனவே கடந்த சனிக்கிழமையும் மக்கள் அதிக அளவில் ஊர்களுக்கு பயணம் செய்தனர். மக்கள் அதிக அளவில் பயணம் செய்வதை பயன்படுத்தி
வழக்கம் போல் சில தனியார் பேருந்து சேவை நிறுவனங்கள், வழக்கமாக சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு நிர்ணயம் செய்யப்படும் டிக்கட் விலையினை விடவும்
இரண்டு மூன்று மடங்கு உயர்த்தியிருக்கின்றன. சாதாரண வார நாட்களில் மதுரைக்கு 500 முதல் 600 - 700 ரூபாய் வரை இருக்கும் இந்த டிக்கட்டுகள் தற்போது 1000 முதல்
2,500 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது.
டிக்கட் முன்பதிவிற்கான ஆன்லைன் சேவை இணைய தளங்களில் அறிவிக்கப்பட்டிருக்கும் டிக்கட் விலை தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த
இக்கட்டான சூழலில் 100 மில்லி சானிடைசரின் விலை 100 ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது என ஆணையிட்டிருக்கும் தமிழக அரசு, பேருந்து கட்டணக் கொள்ளை
விவகாரத்திலும் உடனடியாக தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.