Accident pt desk
தமிழ்நாடு

செங்கல்பட்டு: நின்றிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்து –மருத்துவர் உட்பட 4 பேர் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே பழுதாகி நின்ற சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

webteam

செய்தியாளர்: உதயகுமார்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கத்துறை கூட்டுச்சாலை பகுதியில் இன்று அதிகாலை விழுப்புரத்தில் இருந்து பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிச் சென்ற லாரி பழுதாகி நின்றுள்ளது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த ஆம்னி பேருந்து லாரியின் பின்பக்கம் அதிவேகமாக மோதியதில் லாரியின் ஒரு பகுதி பேருந்தின் உள்ளே சென்றது.

இதைத் தொடர்ந்து முசிறியில் இருந்து கிளாம்பாக்கம் வந்த அரசு பேருந்து, ஆம்னி பேருந்து மீது மோதியது. அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துகளால் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த மேல்மருவத்தூர் சேர்ந்த மருத்துவர் ராஜேஷ், சென்னை கொடுங்கையூரை சேர்ந்த தனலட்சுமி, பிரவீன் மற்றும் அடையாளம் காணப்படாத ஒரு பெண் உட்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.