தமிழ்நாடு

ஓமலூர்: அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

ஓமலூர்: அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருட்கள் கொள்ளை

kaleelrahman

ஓமலூர் அருகே நள்ளிரவில் கிராமத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள் அடுத்தடுத்த 8 வீடுகளின் பூட்டை உடைத்து நகை மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்துள்ள மரக்கோட்டை கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் பெங்களூர், கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று வெள்ளி மற்றும் வைரக்கல் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது சொந்த கிராமத்தில் பெரிய பெரிய வீடுகளை கட்டி வைத்துள்ள இவர்கள் வருடக் கணக்கில் வெளியூரில் தங்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆண்டில் ஒரு மாதம் மட்டும் சொந்த கிராமத்தில் வந்து தங்கி செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதையடுத்து நேற்று நள்ளிரவு மரக்கோட்டை ஊருக்குள் புகுந்த கொள்ளை கும்பல், கிராமத்தில் யாரும் இல்லாத வீடுகளை அறிந்து அங்கு கொள்ளையடித்துள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து 8 வீடுகளின் பூட்டையும், கதவுகளையும் உடைத்து கொள்ளையடித்துள்ளனர். இதில், மனோகரன், விஜயா தம்பதியின் ஒரு மகனுக்கு, பத்து நாட்களுக்கு முன்பு குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை பார்ப்பதற்காக கணவன் மனைவி இருவரும் சேலத்தில் உள்ள மகனின் வீட்டிற்குச் சென்று விட்டனர்.

இதையறிந்த கொள்ளை கும்பல் அவரது வீட்டின் உள்ளே புகுந்து, 10 சவரன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள மஞ்சுநாதன், மஞ்சுளா தம்பதியும், வெளியூர் சென்று இருப்பதை அறிந்து, அவர்கள் வீட்டிலும் உள்ளே சென்று 11 சவரன் தங்க நகை மற்றும் 3 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

அடுத்தடுத்த வீடுகளின் பூட்டும் கதவும் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்த அப்பகுதி மக்கள், தீவட்டிப்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓமலூர் டிஎஸ்பி சங்கீதா, தீவட்டிப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் மற்றும் போலீசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் தொடர்ந்து நள்ளிரவில் 8 வீடுகளில் கொள்ளையடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.