Cattle grazing File Image
தமிழ்நாடு

”ஆடு, மாடுகளை இனி இந்த நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது” - கால்நடை பராமரிப்புத்துறை அதிரடி!

கோடையில் கால்நடைகளுக்கு தேவையான உணவு வழங்கி, நோய் தாக்குதல் இல்லாமல் பராமரிப்பது குறித்து ஓமலூர் கால்நடைத்துறை அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர்.

PT WEB

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூர் ஆகிய வட்டார கிராமங்களில் கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் வெப்பத்தால் கால்நடைகளை நோய்கள் தாக்கம் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்பதால் அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பது குறித்து ஓமலூர் கோட்ட கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

அதன்படி அகத்தி, வேம்பு, பூவரசு, கருவேலம், குடைவேல், பலா, கொடுக்காப்புளி, அரசு, உதியன், இலந்தை ஆகிய மரங்களின் இலைகளை வறட்சியின் போது கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்க வேண்டும். மர இலைகளை தீவனமாக வழங்கும்போது சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மர இலைகளை பிற புல் வகைகள் மற்றும் உலர்ந்த தீவனங்களுடன் சிறிது சிறிதாக கலந்து கொடுக்க வேண்டும். வழங்குவதற்கு முன் 6 மணி முதல் 8 மணி நேரம் வரை இலைகள் வாட வேண்டும்.

உலர வைத்து ஈரப்பதம் 15 முதல் 20 சதவீதம் உப்பு அல்லது வெல்ல கரைசலை தெளித்து கொடுத்தால், இலைகளை விரும்பி சாப்பிடாத கால்நடைகளும், விரும்பி சாப்பிடும். மாலை அல்லது இரவு நேரங்களில் தீவனமிட்டால் கால்நடைகள் நல்ல முறையில் உண்ணும்.

கால்நடைகளை கடும் வெயில் நேரத்தில் 11 மணி முதல் பகல் 3 மணி வரை மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது. நல்ல சுத்தமான குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். தீவன தட்டைகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டி கொடுத்தால் கழிவுகள் குறையும். மழையின்றி வாடும் இளம் சோளப்பயிரில் மாடுகளை விட்டு மேய்க்கக்கூடாது.

இளம் சோளப்பயிரில் சைனிக் அமிலம் நச்சுத்தன்மை உள்ளது. இதனை சாப்பிடும் கால்நடைகள் இறக்கவும் வாய்ப்புள்ளதால், இளம் சோளப்பயிரை கொடுக்கக்கூடாது.

முழு தீவனத்தையும் ஒரே நேரத்தில் கொடுக்காமல் இரண்டு, மூன்று தடவை பிரித்து கொடுக்க வேண்டும். கால்நடைகள் பழக்கத்துக்கு அடிமையானவை என்பதால் தீவனத்தில் திடீரென மாறுதல் செய்யக்கூடாது.

ஒரே நேரத்தில் மொத்த தீவனத்தையும் கொடுத்தால் கால்நடைகளுக்கு வயிறு உப்புசம், அலர்ஜி போன்ற நோய்கள் ஏற்படும். அதனால், கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பராமரித்து வந்தால் கோடையிலும் கால்நடைகளை ஆரோக்கியமாக வளர்த்து லாபம் பெறலாம் என்று தெரிவித்தனர்.