நாமக்கல் அருகே பெண்ணை கடத்த முயன்ற போது, அதனை தடுக்க முயன்ற மூதாட்டி ஆசிட் வீசி கொல்லப்பட்டார். ஆசிட் வீசிய நபரை பொதுமக்கள் அடித்து உதைத்தனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தை சேர்ந்தவர் தனம். இவரது இரண்டாவது மகள் விஜயாவுக்கும், தருமபுரியை சேர்ந்த சாமுவேல் என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், விஜயாவின் சகோதரி மகளான வசந்தியை தவறான நோக்கில் சாமுவேல் அணுகியுள்ளார். இதனால் அதிர்ந்து போன வசந்தி, தருமபுரியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குருசாமிபாளையத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை அறிந்து அங்கு சென்ற சாமுவேல், வசந்தியைக் கடத்த திட்டமிட்டு ஆசிட் மற்றும் கத்தியுடன் வீட்டிற்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. வசந்தியை தன்னிடம் அனுப்புமாறு மூதாட்டி தனத்தை சாமுவேல் மிரட்டிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வீட்டை சூழ்ந்துள்ளனர். அப்போது, மூதாட்டி தனத்தின் மீது சாமுவேல் ஆசிட் ஊற்றியதில் அவர் உயிரிழந்தார்.
இதனால்மூதாட்டியை கொன்ற சாமுவேலை பிடித்து பொதுமக்கள் அடித்து உதைத்தனர். தாக்குதலில் காயமடைந்த சாமுவேல் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது சாமுவேல் உயிரிழந்திருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.