சென்னையில் ரூ.45 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு வருமான வரித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் ஜக்காரியா காலனியில் ராமலிங்கா ஸ்டோர்ஸ் என்ற கடை உள்ளது. போலீசாருக்கான சீருடைகள் விற்பனை செய்யும் கடை இது. இங்கு சாக்குமூட்டை மற்றும் அட்டைப் பெட்டிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தியாகராயநகர் துணை ஆணையர் மேற்பார்வையில் தனிப்படை போலீஸ் களத்தில் இறங்கினர். அவர்கள் அந்த பணத்தைக் கைப்பற்றினர். அதில் 45 கோடி ரூபாய் இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கடை உரிமையாளரான பாரதிய ஜனதாவைச் சேர்ந்த தண்டபாணி என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பணம் பற்றி போலீசார் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பணமதிப்பிழப்பிற்கு பிறகு சிக்கும் பழைய நோட்டுகளில் இதுதான் பெரிய தொகை ஆகும். கடந்த ஏப்ரல் 20ம் தேதி கொடுங்கையூரில் ரூ.1 கோடி பழைய நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை அண்ணாநகரிலும் ரூ.1 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.