தமிழ்நாடு

மழையால் புதருக்குள் உட்கார்ந்திருந்த முதியவர் : நாட்டு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

மழையால் புதருக்குள் உட்கார்ந்திருந்த முதியவர் : நாட்டு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள்

webteam

வாணியம்பாடி அருகே மாடு மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்தார்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் மணி (62). இவர் தங்கள் பகுதியில் உள்ள ஏரியில் இன்று மாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார். மழை பெய்து வந்ததால் அங்குள்ள புதரில் மணி குடையுடன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென அவர் மீது நாட்டு துப்பாக்கியால் மர்ம நபர்கள் சுட்டுள்ளனர் .இதில் அவருடைய கை, கால், மார்பு, இடுப்பு உட்பட உடல் முழுவதும் சுமார் 5 குண்டுகள் பாய்ந்தன. காயமடைந்த மணி அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவருடைய உடலில் இருந்து 5 குண்டுகள் அகற்றப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் பறவைகளை சுடும் மர்ம நபர்கள் தவறுதலாக மணியை சுட்டிருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.