திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் லட்சுமணம் பட்டியைச் சேர்ந்தவர் மூதாட்டி பழனியம்மாள். இவர் வேடசந்தூர் வந்து விட்டு ஊருக்கு செல்வதற்காக ஆத்துமேடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு திண்டுக்கல் செல்லும் அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. மூதாட்டி பழனியம்மாளும் அந்த பேருந்தில் ஏற முயன்றார். ஆனால், பழனியம்மாள் ஏறுவதற்குள் ஓட்டுநர் பேருந்தை சட்டென கிளப்பிவிட்டதாக தெரிகிறது. இதனால், நிலைதடுமாறிய மூதாட்டி, கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட பழனியம்மாளின் உறவினர்கள், பேருந்து ஓட்டுநரிடம் சத்தம் போட்டதால் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பழனியம்மாளை மீட்ட அவரது உறவினர் பேருந்து ஓட்டுநரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“கண்டெக்டர் விசில் அடிச்ச பிறகும் எதுக்கு வண்டிய எடுத்தீங்க? அவருதான் சொல்றாருல்ல.. என்ன அவசரம்? கண்ணு தெரியல? காது கேட்காதா? ஒரு வயசானவங்கள இப்படித்தான் நடத்துவீங்களா?” என உறவினர் ஒருவர் சத்தம் போட்டுள்ளார்.
இதற்கு சற்றும் சலைக்காமல் ஓட்டுநரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அங்கு அரைமணிநேரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. “நீ எங்க போயி என்ன பண்றியோ பண்ணிக்கோ.. பெரிய இது மாதிரி பேச வந்துட்ட” என்று பேருந்து ஓட்டுநர் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அங்கிருந்தவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்குவாதத்திற்கு பிறகு மூதாட்டி ஆட்டோவில் வைத்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.