தமிழ்நாடு

தவணைக்கட்ட தவறிய மூதாட்டி வீட்டில் பைனான்சியர்கள் அடாவடி! -தற்கொலை முயற்சியால் பரபரப்பு

தவணைக்கட்ட தவறிய மூதாட்டி வீட்டில் பைனான்சியர்கள் அடாவடி! -தற்கொலை முயற்சியால் பரபரப்பு

webteam

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை தவணை தேதிக்குள் கட்டாத முதியவரின் வீட்டை பூட்டவந்த வசூல் அதிகாரிகளை கிராம மக்கள் சிறை பிடித்தனர். வேலாத்தாள் என்ற மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு நிலவியது. 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. பல்லடம் தாலுக்கா அலுவலகத்தில் காவலாளியாக பணிபுரிந்த இவர் 2017 ஆம் ஆண்டு மகேந்திரா பைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக பத்திரத்தை அடமானம் வைத்து 1,30,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடன் வாங்கிய ஒரு வருடத்திலேயே கருப்பசாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி வேலாத்தாள் மற்றும் அவரது மகன் நாகராஜ் ஆகியோர் கூலி வேலைக்குச் சென்று மாதா மாதம் கடன் தவணையை முறையாக கட்டி வந்துள்ளனர்.

மொத்தம் 62 மாதங்கள் கட்ட வேண்டிய கடன் தவணையில் கடந்த ஆறு வருடங்களாக முறையாக 58 கடன் தவணை செலுத்தி வந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வேலாத்தாளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ செலவு அதிகரித்த காரணத்தால் கடன் வணையை செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. 16,200 ரூபாய் கடன் தவணை மீதமிருந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணிபுரியும் வசூல் அதிகாரிகள் தொடர்ச்சியாக வேலாத்தாள் வீட்டிற்கு வந்து கடன் தவணை செலுத்துமாறு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வேலாத்தாளின் வீட்டிற்கு வந்த வசூல் அதிகாரிகள் அவரது வீட்டு சுவரில், "இவர் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார் எனவும், கடனை கட்ட தவறியதால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும், இவருக்கு யாரும் கடன் தரக்கூடாது எனவும், பண பரிவர்த்தனைகள் செய்யக்கூடாது எனவும் பெயிண்டில் எழுதி வைத்து சென்றுள்ளனர். இன்று வேலாத்தாள் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீடு திரும்புகையில் அவரது வீட்டிற்கு வந்த சந்துரு, தினேஷ், பிரபாகரன் ஆகியோர் தவணைத் தொகையை கட்டுமாறும், பணம் கட்டாவிட்டால் வீட்டு பத்திரத்தை தரமாட்டோம் எனவும் கூறி வேலாத்தாளின் வீட்டை பூட்ட முயன்றனர்.

இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் வசூல் அதிகாரிகளையும், அவர்களது வாகனத்தையும் சிறை பிடித்தனர். திடீரென வேலாத்தாள் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்த முயன்றார். கிராம மக்கள் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பல்லடம் காவல்துறையினர் தீக்குளிக்க முயன்ற வேலாத்தாளை பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கிராம மக்களால் சிறைபிடிக்கப்பட்ட மூன்று பேரையும் பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் கடனுக்கு இதுவரை ஒரு லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்திய உள்ளதாகவும், இன்னும் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறி தொடர்ச்சியாக நிதி நிறுவனம் தொல்லை கொடுத்து வருவதாகவும் தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வீட்டு பத்திரங்களை வாங்கி வைத்துக்கொண்டு கொடுக்க மறுப்பதாகவும் வேலாத்தாளின் மகன் நாகராஜ் மகேந்திரா நிதி நிறுவனத்தின் மீது புகார் தெரிவித்துள்ளார். கடன் தொகையை கட்டாததால் வசூல் அதிகாரிகள் தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வந்த நிலையில் வயதான நிலையில் வேலாத்தாள் தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.