100வது பிறந்தநாள் கொண்டாடும் மூதாட்டி PT
தமிழ்நாடு

திருவள்ளூர்: 100 வது பிறந்தநாளை கொண்டாடிய மூதாட்டி.. கேக் வெட்டி, கறிவிருந்து வைத்த உறவுகள்!

இன்றைய காலகட்டத்தில் வயதானவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் விட்டு செல்லும் நிலையில், திருவள்ளூரில் 100 வயதை எட்டிய மூதாட்டிக்கு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கேக் வெட்டி, கறி விருந்து அளித்த சம்பவம் நிகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர் - எழில் கிருஷ்ணா

திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் 100 வயதான அன்னம்மாள். இவரது கணவர் ஓய்வு பெற்ற சாலை பணியாளர். 100 வயதை எட்டிய அன்னம்மாள் அந்த பகுதியில் மிகவும் மூத்த குடிமகளாக வாழ்ந்து வருகிறார்.

பெற்றோர்களை கூட்டு குடும்பத்தில் வைத்து பராமரிக்க முடியாமல், ஆதரவற்றோர் இல்லங்களிலும், ஆசிரமங்களிலும் விட்டு செல்லும் இந்த காலகட்டத்தில், அன்னமாளின் பிள்ளைகள், தங்கள் குடும்பத்துடன் அவரை பராமரித்து வருகின்றனர்.

100வது பிறந்தநாளை கொண்டாடிய உறவினர்கள்!

முழு உடல் ஆரோக்கியத்துடன் கிராமத்திற்கே முன்மாதிரியாக வாழ்ந்துவரும் அன்னம்மாள் மூதாட்டிக்கு 100 வயது பூர்த்தியடைந்த நிலையில், அவரை கௌரவிக்கும் வகையில் அவரது 100வது பிறந்த நாளை தனியார் திருமண மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து கேக் வெட்டி, கறி விருந்து அளித்து உற்சாகமாக கொண்டாடினர்.

100வது பிறந்தநாள்

அன்னமாளின் மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் மற்றும் உறவினர்கள் அனைவரும் அன்னமாள் பாட்டியிடம் ஆசி பெற்றனர். மேலும், கிராமத்தில் உள்ள உறவினர்கள் அனைவரும் குடும்பம் குடும்பமாக அன்னமாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.