புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே குடிமராமத்து பணியின் தொடக்கத்தின் போது நாட்டுப்புற பாட்டு பாடிய மூதாட்டிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வாழ்த்து கூறி பரிசுத் தொகையும் வழங்கினார்.
முக்கண்ணாமலைப்பட்டி, மேலப்பட்டு, மதியநல்லூர் ஆகிய கிராமங்களில் குடிமராமத்து பணியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். மதியநல்லூர் கிராமத்தில் உள்ள குளத்தின் தூர்வாரும் பணியை அமைச்சர் தொடங்கி வைக்க வந்த போது அவரை வரவேற்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கையில் ஆரத்தி தட்டுடன் இருந்தனர். அப்போது மூதாட்டி ஒருவர் நாட்டுப்புறப் பாடல் ஒன்றை பாடி அமைச்சரை வரவேற்க கூடியிருந்த பெண்கள் அதனை ஆமோதிப்பது போல் ஒன்று சேர குலவையிட்டு வாழ்த்தினர்.
இதனால் உற்சாகம் அடைந்த அமைச்சர் விஜயபாஸ்கர், மூதாட்டியை மீண்டும் ஒரு முறை பாடச்சொல்லி கேட்டார். பின்னர் அந்த மூதாட்டிக்கு சால்வை அணிவித்து பரிசுத் தொகை அளித்த அமைச்சர், நீங்கள் பாடியதை முதலமைச்சரிடம் போட்டுக் காட்டுவேன் என்று கூறிவிட்டு, மதிய நல்லூர் கிராமத்தின் சிறந்த பாடகி நீங்கள் தான் என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.