தமிழ்நாடு

ட்ரோன் மூலம் தேடப்படும் ‘அரிசி ராஜா’ காட்டு யானை - கிராம மக்கள் மலைமேல் தஞ்சம்! 

ட்ரோன் மூலம் தேடப்படும் ‘அரிசி ராஜா’ காட்டு யானை - கிராம மக்கள் மலைமேல் தஞ்சம்! 

webteam

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையத்தில் சுற்றித் திரியும் அரிசிராஜா காட்டு யானையை ட்ரோன் மூலம் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. யானைக்கு அஞ்சி கிராம மக்கள், மலைமேல் உள்ள கோயிலில் தஞ்சமடைந்துள்ளனர்.

இந்த காட்டுராஜா ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதப்படுத்துவதோடு அரிசியை விரும்பிச் சாப்பிடுவதால் இதனை அரிசிராஜா என்று அழைக்கிறார்கள் கிராம மக்கள். 2017 ஆம் ஆண்டு கோவை வெள்ளூரில் 4 பேரை மிதித்துக்கொன்ற அரிசி ராஜா, பிடிக்கப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது. பின்னர் நவமலை வனப்பகுதியை ஒட்டிய இடங்களில் வலம் வந்த அரிசிராஜா, மேலும் 3 பேரை கொன்றுள்ளதாக கூறுகிறார்கள் மக்கள்.

இதனால் அரிசிராஜாவை பிடிக்கும் பணிகளில் வனத்துறையினர் தீவிரம் காட்டிவருகிறார்கள். அர்த்தநாரிப்பாளையம் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் தற்போது தஞ்சம் அடைந்துள்ள யானையை பிடிக்க கலீம், பாரி என்ற இரண்டு கும்கிகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானைக்கு அரிசி என்றால் பிடிக்கும் என்பதால் அரிசி மூட்டைகளை கொண்டு வந்து வைத்து அதனை வரவழைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யானையை பிடிக்க 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

அண்மைக்காலமாக அரிசி ராஜாவின் அட்டகாசங்கள் அதிகமாகிவிட்டதாலும், சில தினங்களுக்கு முன் விவசாயி ஒருவரை தாக்கி கொன்றதாலும் அச்சம் அடைந்துள்ள அர்த்தநாரிப்பாளையம் கிராம மக்கள், அங்குள்ள பெருமாள் கோவில்பாறை மலையின் உச்சியில் உள்ள கோவிலில் தஞ்சமடைந்துள்ளனர்.

யானையை மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க கால்நடை மருத்துவர் குழுவுடன் தயாராக உள்ள நிலையில், அதன் இருப்பிடத்தை கண்டுபிடிக்க ட்ரோன் வைத்து தேடும் பணிகளும் நீடித்து வருகின்றன. அரிசி ராஜா பிடிபட்டுவிட்டால், அதனை டாப் சிலிப் வரகழியார் யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.