தமிழ்நாடு

கொத்தடிமைகளாக கொடுமை அனுபவித்த குடும்பம் : காப்பாற்றிய அதிகாரிகள்

கொத்தடிமைகளாக கொடுமை அனுபவித்த குடும்பம் : காப்பாற்றிய அதிகாரிகள்

webteam

நாமக்கல் அருகே செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணியாற்றிய, ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை வருவாய் துறையினர் மீட்டனர்.

நாமக்கல் அடுத்த பொட்டிரெட்டிபட்டியை சேர்ந்த குப்புசாமி மற்றும் பழனிசாமி ஆகியோர் செங்கல் சூளை நடத்தி வருகின்றனர். இதில் விழுப்புரம் மாவட்டம் கல்பட்டு பகுதியை சேர்ந்த ஏழுமலை, மகாலட்சுமி, குணசேகரன், காந்திமதி, துர்கா ஆகிய ஒரே குடும்பத்தினர் கடந்த ஒரு ஆண்டாக கொத்தடிமைகளாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்களுடன் நவீன்குமார் என்ற ஒன்றரை வயது குழந்தையும் உள்ளது. இவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்காமல் உடல்நிலை சரியில்லாத போதும் தொடர்ந்து பணி செய்ய சூளை உரிமையாளர்கள் நிர்பந்தித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு குணசேகரனை செங்கல் சூளை உரிமையாளர்கள் தாக்கியுள்ளனர். 

இதில், மனமுடைந்த குணசேகரன் நாமக்கல் மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, சார் ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் செங்கல் சூளைக்கு சென்று விசாரணை செய்தனர். அத்துடன் அங்கு சிக்கியிருந்த 6 பேரையும் மீட்டனர். பின்னர் நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அவர்களை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அவர்களிடம் உரிய விசாரணை நடத்திய பின், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.