பொதுவாக சாப்பாட்டை கொண்டாடும் மக்கள் தமிழ்மக்கள். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சுவை. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல்.. இந்திய மக்களைப் பொறுத்தவரை உணவு என்பது பண்பாடு, கலாச்சாரம். அப்படிப்பட்ட ஊரில் உணவால் மக்கள் இறக்கும் நிகழ்வு தற்போது அடிக்கடி நடந்து வருகிறது என்பது வருந்தத்தக்கது.
ஓரிரு தினங்கள் முன் நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி சாலையில் உள்ள துரித உணவகம் ஒன்றில் ஷவர்மா வாங்கி உண்ட கலையரசி என்ற மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.
உணவகங்களில் தரமில்லாத உணவுகள் வழங்கப்படுகின்றன என்றும் கவனக்குறைவால் சமைக்கப்படும் உணவுகளில் இறந்த உயிரினங்கள் இருப்பதும் அடிக்கடி செய்தியாகின்றன. அச்சமயங்களில் எல்லாம் அந்த குறிப்பிட்ட உணவகத்திலோ அல்லது மற்ற உணவகங்களிலோ உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கெட்டுப்போன உணவுகளை பறிமுதல் செய்து அதிலும் சில உணவகங்களுக்கு சீல் வைப்பார்கள்.
இந்நிலையில் தமிழகம் முழுவதிலுமுள்ள அனைத்து உணவகங்களிலும் ஆய்வு செய்ய மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
நாமக்கல் முழுவதும் சோதனையில் ஈடுப்பட்ட உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 10 உணவகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். உணவுப் பாதுகாப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சோதனையில் கெட்டுப்போன இறைச்சி மற்றும் காய்கறிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டது.
ஏற்கெனவே, நாமக்கல்லில் தற்காலிகமாக ஷவர்மா மற்றும் கிரில் சிக்கன் போன்றவை விற்பனை செய்யக்கூடாது என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சேலம் ஆத்தூர் பகுதிகளில் நகராட்சி சுகாதார அலுவலர் முத்து கணேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இறைச்சி, முந்தைய நாள் உணவு போன்றவை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கெட்டுப்போன நிலையில் இருந்த 80 கிலோவிற்கும் அதிகான இறைச்சியும் பறிமுதல் செய்யப்பட்டன. கெட்டுப்போன உணவுகளை வைத்திருந்த உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ள நிலையில் லைசன்ஸ் இல்லாமல் செயல்படும் உணவகங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூரில் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சிவராம பாண்டியன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகள், இறைச்சி சம்பந்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்யும் கடைகள் என பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. பழைய இறைச்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அக்கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் வாட்ஸ்-அப் மூலம் புகார் அளித்தால் சம்பந்தபட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள துரித உணவகங்களில் சோதனையில் ஈடுபட்ட உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன இறைச்சிகள், நாள்பட்ட எண்ணெய்கள் போன்றவை உபயோகப்படுத்தப்படுகிறதா என்பது குறித்தெல்லாம் சோதனையில் ஈடுபட்டனர். உணவகங்களில் குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பழைய மீன்கள், இறைச்சி, சமைத்த உணவுகள், நிறமிகள் உள்ளிட்டவறை அழித்தனர். மேலும் விதிமுறைகளை பின்பற்றாமல், பழைய உணவுப் பொருட்களை வைத்திருந்த இரண்டு கடைகளுக்கு தலா ரூ.2,000 அபராதமும், சுகாதாரமற்ற முறையில் பொருட்களை வைத்திருந்த 6 கடைகளுக்கு தலா ரூ.1,000 என ரூ.10,000 அபராதம் விதித்தனர். மேலும் விதிமுறைகள் மீறப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்து அனுப்பினர்.
புதுக்கோட்டையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் புதுக்கோட்டையில் உள்ள ஷவர்மா விற்பனை செய்யும் ஹோட்டல்கள் அசைவ உணவு கடைகள் ஆகியவற்றில் அதிரடியாக சோதனை நடத்தினர். அதில் கெட்டுப்போன இறைச்சிகளை பறிமுதல் செய்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதை ஒவ்வொரு கடையிலும் ஆசிட் மற்றும் பினாயில் ஊற்றி அழித்தனர். பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்ட ஷவர்மா மற்றும் உணவு வகைகள் 50 கிலோ இருக்கும் என்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கையில் பேருந்து நிலையம், மதுரை முக்கு, காந்தி வீதி உட்பட பல்வேறு பகுதிகளில் நகராட்சி நிர்வாகத்தினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர் இணைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில் பல கடைகளில் சுமார் 100 கிலோ அளவிற்கான கெட்டுப்போன இறைச்சி மற்றும் கலர் ரசாயன பொடிகள் பயன்படுத்திய உணவு பொருட்கள் , ஷவர்மா விற்பனைக்கு வைத்திருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்து அழித்தனர்.