கோவை உக்கடத்தில் கெட்டுப்போன நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 500 கிலோ மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தமிழகம் முழுவதும் மீன் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் மீன்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய மீன்வளத்துறை இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆய்வின்போது தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்வது உறுதி செய்யப்பட்டால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், உக்கடம் பகுதியில் அமைந்துள்ள மொத்த மீன் விற்பனை செய்யும் மார்க்கெட்டில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 430 கிலோ கெட்டுபோன மீன்களும், 70 கிலோ பார்மலின் தடவிய மீன்களும் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு மதுரை கரிமேடு மீன் சந்தையில் அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி 2 டன் அளவிலான ரசாயனம் கலந்த மீன்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.