கன்னியாகுமரி மாவட்டம் ராணித்தோட்டம் பணிமனையில் இருந்து திருநெல்வேலி, மதுரை, ராமேஸ்வரம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் திருநெல்வேலி - நாகர்கோவில் செல்லும் அரசு பேருந்தில் ஞான பெர்க்மான்ஸ் என்பவர் ஓட்டுனராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 10 நாட்களாக இப்பேருந்தில் 'பிரேக்' சரியில்லாமல் இருப்பதாகவும், வலது பக்கம் திருப்பும் போது இடது பக்கமாகவும், இடது பக்கம் திருப்பும்போது வலது பக்கமாகவும் வண்டி செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.
அதேபோல், “அரசு பேருந்தை 60 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கினால் சுத்தமாக 'பிரேக்' அடித்து வண்டியை நிறுத்த முடியவில்லை. இது விபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அதிகாரிகளிடம் கூறினால், அவர்கள் என் மீதுள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக சரிசெய்து தருவதில்லை” என்று கூறி, அரசு பேருந்தை நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து ராணித்தோட்டம் பணிமனை அதிகாரிகளிடம் நாம் கேட்ட போது, “பேருந்து ஓட்டுனர் ஏற்கனவே பலமுறை அதிகாரிகளுடன் பிரச்னை செய்து வருபவர். அவருக்கு பணியாற்றுவதற்கு விருப்பம் இல்லாமல், பொய்யான புகாரை தெரிவித்து வருகிறார். பேருந்தை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பிரேக் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஓட்டி பார்த்து, அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று சான்றிதழ் கொடுத்துள்ளதார். ஓட்டுனர் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினர்.