நமீதா புதியதலைமுறை
தமிழ்நாடு

“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இந்து அறநிலையத் துறையினர் என்னை அனுமதிக்கவில்லை” - நமீதா

PT WEB

செய்தியாளர்- விக்னேஷ்முத்து

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் என்னையும் எனது கணவரையும் இன்று காலை அனுமதிக்கவில்லை. எங்களின் சாதி மற்றும் மதச் சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கேட்டனர். என்னை மரியாதைக் குறைவாகவும் நடத்தினர்” என பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான நமீதா குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள நமீதா, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நமீதா வெளியிட்டுள்ள வீடியோவில், “மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய சென்று இருந்தேன். அப்போது பெண் அதிகாரி ஒருவர் என்னிடம் இந்து என்பதற்கான சான்றிதழ் கேட்டனர். நான் இந்து மதத்தை சேர்ந்தவள்.

என் திருமணம் திருப்பதியில் நடந்தது. என் குழந்தைக்கு கூட கிருஷ்ணனின் பெயர்தான் வைத்துள்ளேன். கோவில்களில் இதுபோன்ற நடவடிக்கைகள் நடப்பது என்பது வருத்தமாக உள்ளது. இந்தியாவில் எந்த கோவிலிலும் என்னிடம் இந்த கேள்வியை கேட்டதில்லை. மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தினர் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். அமைச்சர் சேகர்பாபுவிடம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் சூப்பிரண்டு வெண்மணி இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர், “நடிகை நமீதாவிடம் நாங்கள் ‘மேல் அதிகாரிகளிடம் கேட்டு கோயிலுக்குள் அனுமதிக்கிறோம். கொஞ்ச நேரம் நில்லுங்க’ என்றுதான் சொன்னோம். அதற்குள் நடிகை நமீதாவின் கணவர், ‘நாங்கள் இந்துக்கள்தான். திருப்பதி மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு கோவிலுக்கு சென்று வந்திருக்கிறோம்’ என கூறினார்.

அதன் பின்னர் இணை ஆணையர் கிருஷ்ணனிடம் கேட்டுவிட்டு, அவர்களை உள்ளே அனுப்பினோம். மீனாட்சி அம்மன் கோவிலில் இந்துக்களை மட்டுமே அனுமதித்து வருகிறோம். அதனால் விசாரித்தோம். மற்றபடி அவர்களிடம் கடினமாக நடந்து கொள்ளவில்லை. கோவில் விதிமுறைகள்படிதான் பேசினோம்” என்றார்.