தமிழ்நாடு

பக்தர்கள் வெளியேற்றம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு

Rasus

தஞ்சை பெரிய கோயிலில் ஐ.ஜி.பொன்.மாணிக்‌கவேல்‌ தலைமையிலான சிலைக் க‌டத்தல் ‌‌தடுப்பு‌ பிரிவி‌னர்‌ ஆய்வு ‌‌‌ நடத்தினர்.

பிற்பகல் ‌‌இரண்டரை மணியளவில் கோயிலுக்குச் சென்ற 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள்‌, பக்தர்களை வெளியேற்றினர். அதனைத்தொடர்ந்து தஞ்சை பெரிய கோயிலின் பிரதான நுழைவு வாயிலை அடைத்து, ஆய்வுப் பணிகளைத் தொடங்கினர். தஞ்சை பெரி‌ய கோயிலில் இருந்து சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் உலக மாதேவி சிலைகள் குஜராத்தில் உள்ள சாராபாய் அறக்கட்டளையில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டன.

‌தற்போது தஞ்சை பெரிய கோயிலில் வைக்கப்பட்டுள்ள அந்த இரண்டு சிலைகளும் தங்களுக்குச் சொந்தமானவை என்று குஜராத் அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1942-ஆம் ஆண்டு முதல் இந்தச் சிலைகள் தங்களிடம் இருப்பதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் ‌தஞ்சை கோயிலில் இருந்து காணாமல் போன சிலைகளின் உயரமும், தங்களிடம் ‌இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளின் உயரமும் வெவ்வேறானவை என குஜராத் அறக்கட்டளை கூறியிருந்தது.

இந்த வழக்கில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு சார்பில் கூடுதல் ஆவணங்களை அளிக்க அவகாசம் கேட்ட நிலையில், 6 வாரம் ‌அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐ.ஜி.பொன்.மாணிக்‌கவேல்‌ தலைமையில் சிலைக் க‌டத்தல் ‌‌தடுப்பு‌ பிரிவி‌னர் தஞ்சை பெரிய கோயிலில் ஆய்வு நடத்தினர்.