கைது செய்யப்பட்டவர்கள் pt web
தமிழ்நாடு

பெங்களூருவில் கொலை; சேலத்தில் வீசப்பட்ட பெண் உடல்.. ஒடிசாவை சேர்ந்த தம்பதியினரை கைது செய்த காவல்துறை

சூட்கேஸில் அழுகிய நிலையில் இருந்த பெண்ணின் சடலத்தை மீட்ட வழக்கில் குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர் மனோஜ் கண்ணா

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சேலத்திலிருந்து கோவை நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. இதனருகே ஆவரங்கம்பாளையம் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தையொட்டிச் செல்லும் சர்வீஸ் சாலையின் ஓரத்தில் சிறிய பாலம் இருக்கிறது. அந்தப் பாலத்தின் கீழ் கடந்த மாதம் 30-ம் தேதி துர்நாற்றம் வீசி வருவதாக அப்பகுதி மக்கள் வைகுந்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயகுமாருக்கு தகவல் அளித்தனர்.

அவர் சங்ககிரி போலீஸில் புகார் செய்ததை தொடர்ந்து காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் DSP ராஜா, காவல் ஆய்வாளர்கள் காத்திகேயினி, பேபி, செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பாலத்திற்கு கீழ் டிராவல் சூட்கேஸில் ஒரு இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்ணை வேறு எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி சென்றிருக்கலாம் என்றும், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணிற்கு சுமார் 20 முதல் 30 வயது இருக்கலாம் என்றும் தெரியவந்தது. இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை அடுத்து சடலமாக மீட்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் டிராவல் சூட்கேஷில் இருந்த இளம்பெண் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த 15 வயதான சுமைனா என்ற சிறுமி என தெரியவந்தது. இவர் பெங்களூரு பாகணபள்ளி பகுதியில் வசிக்கும் ஒடிசாவைச் சேர்ந்த அபினேஸ்சாகு (40) அஸ்வின்பட்டில் (37) தம்பதியினரின் வீட்டில் அவர்களது மகனை கவனித்து கொண்டு வந்ததும் தெரியவந்தது.

இத்தகைய சூழலில், தனது மகனது உணவை உண்டதாக சுமைனாவை அஸ்வின்பட்டில் தலையில் தாக்கியதால் அவர் உயிரிழந்த நிலையில், அவரை டிராவல் சூட்கேஷில் அடைத்து வைத்து காரில் ஏற்றிக்கொண்டு பெங்களூருவிலிருந்து சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிச் சென்றுள்ளனர்.

இவையனைத்தும் விசாரணையில் தெரியவந்ததை அடுத்து உடனடியாக கணவன் மனைவி இருவரையும் கைது செய்த சங்ககிரி போலீசார் சங்ககிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இளம்பெண்ணை தாக்கி கொலை செய்து டிராவல் சூட்கேஷில் அடைத்து தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் வீசிச்சென்ற வழக்கில் வெளிமாநில தம்பதியினர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இச்சம்பவம் சங்ககிரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.