தமிழ்நாடு

ஒகி புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு!

ஒகி புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.133 கோடி ஒதுக்கீடு!

webteam

வடகிழக்கு பருவமழை, ஒகி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு ரூ.133.05 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

ஒகி புயலால் தமிழகத்தில் கன்னியாகுமாரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. குறிப்பாக கன்னியாகுமரி முழுமையான சேதத்தை அடைந்தது. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வாழை மற்றும் ரப்பர் தோட்டங்கள் பாதிப்படைந்தன. நூற்றக்கணக்கான மீனவர்கள் கரை திரும்பவில்லை. 

ஒகி புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவித்து மத்திய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர். இதற்கிடையே ஒகி புயல் பாதிப்பு குறித்து தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். அத்துடன் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 

இந்நிலையில் டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒகி புயல் நிவாரண நிதிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒகி புயலால் பாதிக்கப்பட்ட கேரளாவிற்கு ரூ.169.06 கோடி வழங்க உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு ரூ.133.05 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.