தமிழ்நாடு

மயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்

மயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் - ஓ.எஸ்.மணியன்

webteam

மயிலாடுதுறை அடுத்தாண்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். 

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்திய சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கலந்து கொண்டு, தேர்வு செய்யப்பட்ட 823 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக அரசு இந்த ஆண்டு திருநெல்வேலி, வேலூர் ஆகிய மிகப்பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை அறிவித்துள்ளது. இதேபோல மயிலாடுதுறையை பிரித்து தனி மாவட்டம் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை பல தரப்பில் இருந்து வந்து கொண்டிருக்கிறது. இந்த கோரிக்கையை தமிழக முதல்வர் பரிசீலனை செய்து, அடுத்த ஆண்டு மயிலாடுதுறை தனி மாவட்டமாகும் அறிவிப்பை வெளியிடுவார். 

காவிரியில் ஜூன் 12 திறக்க வேண்டிய தண்ணீர், தற்போது திறக்கப்பட்டுள்ளது. தற்போது நாற்று விடும் பணிக்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் அதிக நீர்வரத்து இருந்து அதிக தண்ணீர் திறந்து விடப்பட்டால் அதை பாசனத்துக்காக பயன்படுத்தலாம். இந்தாண்டு விவசாயிகள் மகிழ்ச்சிக்கு இயற்கை உதவும்” எனத் தெரிவித்தார்.