நாதக சீமான் முகநூல்
தமிழ்நாடு

“திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?” - சீமான்

“திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?” என்ற பெரிய கேள்வியை எழுப்பியுள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.

ஜெனிட்டா ரோஸ்லின்

சென்னை அசோக் நகரில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மோட்டிவேஷன் எனும் பெயரில், மகா விஷ்ணு என்பவர் பிற்போக்குத்தன கருத்துகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசியிருந்தார். ஆரம்பத்தில், திருக்குறள் கூறி உரையைத் தொடங்கினாலும், அதன் பிறகு மந்திர, தந்திரங்கள், பாவ, புண்ணியங்கள், கருமா, முற்பிறவி என்று இஷ்டம்போல் பேச ஆரம்பித்தார்.

அப்போது முற்பிறவி பற்றி அவர் பேசியபோது குறுக்கிட்ட பார்வை மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் என்பவர், “ஏன் பிற்போக்குத்தனமான கருத்துகளை மாணவிகள் மத்தியில் பேசுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு மகாவிஷ்ணு, மோசமான முறையில் அந்த ஆசிரியரிடம், “நீங்கள் என்ன சிஇஓவை விட பெரியவரா?” என்று தொடங்கி, அவர் மனது புண்படும்படி வகையில் தாக்கி பேசினார்.

அதே நேரத்தில் வேறு எந்த ஆசிரியரும் சங்கர் ஆசிரியரின் பக்கம் நின்று பேசாமல், சிறப்பு விருந்தினராக வந்த மஹா விஷ்ணுவை சமாதானம் செய்யும் வேளையில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பல தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்தசூழலில், பள்ளிக்கல்வித்துறை அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிட நீக்கம் செய்தது. மேலும் தற்போது மகாவிஷ்ணு கைதும் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து அறிக்கையினை வெளியிட்டுள்ளார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான். அதில், ”திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? ” என்ற பெரிய கேள்வியை எழுப்பியுள்ளார்.

தன் அறிக்கையில் சீமான், “குறிப்பிட்ட பள்ளிகளில் நடைபெற்ற சொற்பொழிவானது கல்வித்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதியின்றி நடைபெற்றதா? பள்ளிக்கல்வித்துறை அமைச்சகத்துக்கு தெரியாமல் நடைபெற்றதா? அப்படி தெரியாமல் நடைபெறுகிறது என்றால் அதைவிட மோசமான நிர்வாகச் செயல்பாடு என்னவாக இருக்க முடியும்? அந்த அளவிற்கு அரசு வலிமையற்றதாக இருக்கிறதா?

ஒருவேளை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளின், அமைச்சகத்தின் அனுமதியோடுதான் நடைபெற்றதென்றால் அவர்களுக்கெல்லாம் என்ன தண்டனை கொடுப்பது? யார் தண்டனை கொடுப்பது?

ஏற்கனவே, பள்ளிக்கல்வித்துறையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிகழ்வுகள் அரங்கேறி கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அதிலிருந்து அரசு பாடம் கற்கவில்லையா? பள்ளிக்கல்வித்துறை தொடர்ந்து அலட்சியமாகச் செயல்படுவது ஏன்?

அறிவுக்கருவறையில் நம்மைச் சுமக்கின்ற தாயாகத் திகழும் ஆசிரியப்பெருமக்களைப் பார்க்கும்போது வணங்குவது, மனதில் வைத்து போற்றுவதுதான் தமிழர் மரபு. அதைவிடுத்து ஆசிரியர் தினமன்று, ஆசிரியர் கால்களை மாணவ மாணவியர் கழுவி, அதற்கு பூசைகள் செய்வது என்ன மாதிரியான நடைமுறை? இதெல்லாம் யாருடைய பண்பாடு? இப்புதிய பழக்கங்களை வலிந்து திணிப்பது யார்? தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் இவ்வாறு நடைபெறுவதை பள்ளிக்கல்வித்துறை எப்படி வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது?” என்று பதிவிட்டுள்ளார்.