நாதக சீமான் - தாவெக விஜய் முகநூல்
தமிழ்நாடு

”என்னுயிர் இளவல், என் அன்புத்தளபதி” - விஜய் உடனான கூட்டணி குறித்தும் சூசகமாக பேசிய சீமான்!

ஜெனிட்டா ரோஸ்லின்

“உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!”என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டு.

பத்து மற்றும் பன்னிரெண்டம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் வகையில், நடிகர் விஜய் அவர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறார். இந்நிகழ்வானது இன்று திருவான்மியூர் உள்ள மண்டபத்தில் நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய்யின் இந்த செயலுக்கு நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில்,

கல்வி என்பது மானுட உரிமை! அதைக் கொடுக்க மறுப்பது மாபெரும் கொடுமை; கல்வியை அனைவருக்கும் தரமாக, சரியாக, சமமாக வழங்க வேண்டியது ஒரு நல்ல அரசின் தலையாயக் கடமை! ஆனால், தற்காலச்சூழலில் கல்வி என்பது தனியார் மயமாக்கப்பட்டு, மதிப்புக்கூட்டப்பட்ட விற்பனை பண்டம்போல, கல்விக் கட்டணம் என்ற பெயரில் பெரும் பகற்கொள்ளை நடக்கின்றது;

பணம் படைத்தவர்களால் மட்டுமே தரமான கல்வியைப் பெற முடியும், ஏழைகளுக்கு நல்ல கல்வி என்பது எட்டாக்கனி’ எனும் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமகாலத்தில், ஏழை - பணக்காரர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி, தமிழ்நாடு முழுவதும் கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ - மாணவியரை அழைத்து, பாராட்டுச்சான்றிதழுடன், உயர்கல்விக்கான உதவித்தொகையும் வழங்கி ஊக்கப்படுத்துகின்ற உன்னதப்பணியைச் செய்யும், என்னுயிர் இளவல், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர், என் அன்புத்தளபதி விஜய் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!”என்று தெரிவித்துள்ளார்.

தற்போது வரை நடைப்பெற்ற எந்த தேர்தலிலும் நாதக கட்சிகளோடு போட்டியிடவில்லை. தனித்துதான் தேர்தல் களம் கண்டுள்ளது. இந்தவகையில், வருகிற 2026 ஆம் ஆண்டு நடைப்பெறவுள்ள சட்டமன்றத்தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தோடு சேர்ந்து போட்டியிட்டுவதற்கான முனைப்பாக நாதக தலைவர் சீமானின் இந்த பதிவுகள் பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக புதிய தலைமுறைக்கு சீமான் அளித்த பேட்டியில் இடம்பெற்றுள்ள தகவல்களை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.